டாஸ்மாக் திறப்பு நேரம் மாற்றமா? டெட்ரா பேக்கில் மதுபானம்.. அமைச்சர் முத்துசாமி பேட்டி

Tasmac shopsdecision

டாஸ்மாக் கடைகள் மூலம் வருமானம் ஈட்டுவது என்பது அரசின் நோக்கம் அல்ல என்று அமைச்சர் முத்துசாமி பேட்டி.

தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை குறித்து பல்வேறு முக்கிய நிர்வாகிகளுடன் இன்று சென்னை தலைமை செயலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் டாஸ்மாக் நிறுவனத்தின் அடுத்தகட்ட செயல்பாடுகள், கண்காணிப்பு கேமரா பொருத்துவது, ரசீது வழங்குவது, கட்டுப்பாட்டு அறை அமைப்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்படுவதாக கூறப்பட்டது.

மேலும், அதிகவிலைக்கு மதுபானங்கள் விற்பதை தடுப்பது, டாஸ்மாக் கடைகளில் டெட்ரா பேக் களில் மது விற்பனை செய்வது, மாவட்ட வாரியாக வாட்ஸ்அப் குழுக்கள் அமைப்பது தொடர்பாகவும் முக்கிய முடிவு எடுக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், டாஸ்மாக் தொடர்பான கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் முத்துசாமி, டாஸ்மாக் பணியாளர்களின் பிரச்னையை சரி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.

டாஸ்மாக் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.  அனுமதி (உரிமம்) பெற்றவர்கள் மட்டுமே பார் நடத்த முடியும். உரிமம் இன்றி பார் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். கூடுதலாக பார் தேவைப்படும் இடங்களில் நீதிமன்ற வழக்கிற்கு பின் அனுமதி வழங்கப்படும். 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட இடங்களில் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் குடிக்கும் பழக்கத்தை கைவிட்டால் மகிழ்ச்சியே. டாஸ்மாக் வருமானத்தை கூடுதலாக்க வேண்டும் என்பதற்காக விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்படுவதில்லை. என்ன காரணங்களுக்காக மதுபான விற்பனை குறைகிறது என்பது குறித்து ஆய்வு செய்யவே டார்கெட் உள்ளது. டாஸ்மாக் கடைகள் மூலம் வருமானம் ஈட்டுவது என்பது அரசின் நோக்கம் அல்ல என்றார்.

மேலும், டெட்ரா பேக்கில் மதுபானம் விற்கப்படுவதை மக்கள் விரும்புகின்றனர். டெட்ரா பேக்கில் மதுபானம் கொண்டு வந்தால் பாட்டில் பயன்பாட்டை குறைக்கலாம். சட்ட விதிகளை மீறாமல், மக்களுக்கு பயன்படும் வகையில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் திறப்பு நேரத்தை மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகிறோம். காலை 7 முதல் காலை 9 மணி வரை டாஸ்மாக் திறக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் வருவதாகவும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்