டாஸ்மாக், மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை!
தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை.
தமிழகம், கேரளா மற்றும் ஐதராபாத்தில் டாஸ்மாக் மற்றும் மின்துறை அரசு ஒப்பந்ததாரர்கள் அலுவலகம் மற்றும் இல்லங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில், சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது என கூறப்படுகிறது.
கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 22 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருவதாகவும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு அமைந்துள்ள மண்மங்கலம் பஞ்சாயத்தில் மட்டும் 26 இடங்களில் சோதனை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கரூரில் அமைச்சரின் நண்பர் ஒப்பந்ததாரர் சங்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுபோன்று, கரூரில் உள்ள அமைச்சரின் சகோதரர் அசோக் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், வெளிமாநிலங்களில் அமைச்சர் செந்தில் பபாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது என்றும், அதன்படி, கேரளா, ஐதராபாத் மற்றும் பெங்களூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.