தமிழகத்தில் ஆன்லைன் மூலம் மது விற்பனை.? டாஸ்மாக் விளக்கம்.!
சென்னை : வீட்டிலிருந்தே உணவு ஆர்டர் செய்வது போல், மது பானங்களையும் ஆர்டர் செய்யும் வசதியை அமல்படுத்த ஸ்விக்கி (Swiggy), சொமாட்டோ (Zomato) போன்ற நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியானது.
அந்த தகவலின்படி, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இதற்கு அனுமதி உள்ள நிலையில், கர்நாடகா, ஹரியானா, தமிழ்நாடு, பஞ்சாப், கேரளா ஆகிய மாநிலங்களில் ஆன்லைன் மது விற்பனையை மேற்கொள்ள சொமோட்டோ, ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் ஆன்லைன் மூலம் மது விற்பனை தொடர்பான வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்து டாஸ்மாக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் “ஆன்லைன் வினியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே மதுவை கொண்டு சென்று விற்கும் திட்டம் இல்லை.
இது போன்ற எந்த புது முயற்சியிலும் இறங்கும் திட்டம் இல்லை. மேலேயும், டெட்ரா பாக்கெட்டில் மதுபானங்களை அறிமுகம் செய்யவும் திட்டமில்லை” என்று விளக்கம் அளித்துள்ளது.