தஞ்சை தேர் விபத்து – நேரில் சென்று நிவாரணம் வழங்கிய ஓபிஎஸ்!
தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் நேரில் ஆறுதல்.
தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் கடந்த 27-ஆம் தேதி அதிகாலை சித்திரை திருவிழாவையொட்டி நடைபெற்ற திருவிழாவின்போது, சப்பரம் மீது மின்சாரம் பாய்ந்ததால் 11 பேர் பலியான நிலையில், 14 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு பிரதமர், முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து, நிவாரண உதவிகளும் அறிவிக்கப்பட்டது. அந்தவகையில், தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும் என்றும் காயமடைந்தோருக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில் திருவிழாவின்போது ஏற்பட்ட சப்பர விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து நிவாரண தொகையை ஒவ்வொரு குடும்பங்களுக்கும் வழங்கினார். அதன்படி, விபத்தில் இறந்த 11 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கினார் ஓபிஎஸ்.