குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்திலும் தீவிரமடைந்து வரும் போராட்டங்கள்!
- குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வடமாநிலங்களைபோல தென் மாநிலங்களிலும் போராட்டம் வலுப்பெற்று வருகிறது.
- தமிழகத்தில் சென்னை வள்ளுவர் கோட்டம், சென்ட்ரல் ரயில் நிலையம், மதுரை, தேனி, விழுப்புரம், வேலூர், திருச்சி, புதுச்சேரி என பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
மத்திய அரசானது அண்மையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது. இந்த திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நாடுமுழுவதும் நடைபெற்று வருகிறது. டெல்லி கல்லூரி மாணவர்களிடையே வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் டெல்லி கல்லூரி மாணவர்கள் மீது தடியடி நடத்தியதால் நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் இதற்கான போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.
கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதற்கும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும் போராட்டம் தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் நடிகர் சித்தார்த் உள்ளிட்ட சில சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
சென்னை ரயில் நிலையத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய போராட்டக்காரர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். தேனி பெரியகுளத்தில் போராட்டம் நடத்தியவர்கள் குடியுரிமை சட்ட திருத்த நகலை காலில் போட்டு மிதித்து போராட்டம் நடத்தியதால் அங்கு போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கடலூர், திருச்சி, விழுப்புரம், வேலூர் என அநேக இடங்களில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. புதுசேரி மத்திய கல்லூரியில் மாணவர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான கோஷங்களை முழக்கமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.