16,000 கனஅடி தண்ணீர் வேண்டும்.! இன்று டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை வாரியம்.!
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி கர்நாடக அரசு தரவேண்டிய உரிய அளவு தண்ணீரை கடந்த சில மாதங்களாகவே அம்மாநில அரசு தராமல் இருந்து வருகிறது. இதனால் காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை வாரியம், மத்திய அரசு என பல்வேறு முறைகளில் தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு முன்வைத்து வருகிறது.
நேற்று முன்தினம் காவிரி ஒழுங்காற்று குழு ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் தமிழகத்திற்கு வினாடிக்கு 13,000 கனஅடி நீர் வீதம் தண்ணீர் அடுத்த 15 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
ஆனால், வழக்கம் போல தங்களிடம் போதிய தண்ணீர் இல்லை என கர்நாடக அரசு கூறியது. அதன் பின்னர் அடுத்த 16 நாட்களுக்கு அதாவது, அக்டோபர் 16 முதல் 31ஆம் தேதி வரை வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் வீதம் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்து இருந்தது.
வழக்கம்போல, காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையை அடுத்து, காவிரி மேலாண்மை வாரிய கூட்டம் நடைபெறும். அதேபோல இன்று காவிரி மேலாண்மை வாரிய தலைவர் எஸ்.கே.ஹெல்தர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இன்றைய கூட்டத்தில் தமிழகத்துக்கு வினாடிக்கு 16,000 கனஅடி நீர் வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டம் பற்றி நேற்று பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கர்நாடக அரசு ஏற்கனவே காவிரி மேலாண்மை வாரிய உத்தரவுப்படி வினாடிக்கு 3000 கனஅடி நீர் வீதம் தண்ணீர் கடந்த 18 நாட்களாக திறந்து வருகின்றனர். இதனால் நமக்கு 4.21 டிஎம்சி அளவு தண்ணீர் கிடைத்துள்ளது. தமிழகத்தின் நீர் தேவைக்கு இது போதாது என்றாலும், காவிரி மேலாண்மை வாரிய குழு உத்தரவின்படி இந்த தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
அதேபோல தமிழகத்திற்கு அடுத்ததாக வினாழிக்கு 16 ஆயிரம் கன அடி நீர் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கை நாளை (இன்று) நடைபெறும் காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் முன்வைக்கப்படும் என்று நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.