நாளை முதல் தொடக்கம் – தமிழக அரசு அறிவிப்பு.!
நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு தமிழக அரசின் தொலைக்காட்சியில் நாளை முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிந்த பிறகு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்பதால் மாணவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டியிருக்கும். இதில் குறிப்பாக நீட் தேர்வு எழுத்தவுள்ள மாணவர்கள் பயிற்சி மையங்களுக்கு செல்ல முடியாத சூழல் உள்ளது.
ஆன்லைன் மூலம் பல மாணவர்கள் பயிற்சி பெற்றாலும், ஏழை எளிய மாணவர்கள் இதையே பெற முடியாத நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு நீட் தேர்வின் பயிற்சி வகுப்புகளை தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் நடத்த முடிவு செய்துள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் நாளை முதல் ஒளிபரப்பாகும் என்று தெரிவித்துள்ளனர். மேலும், நீட் தேர்வுக்கு பயிற்சி அளிப்பதற்கு வல்லுநர்களை கொண்டு எடுக்கப்படும் வகுப்பு தினமும் 2 மணி நேரம் ஒளிபரப்பாகும் என்று கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஜூலை 26ம் தேதி, ‘நீட்’ தேர்வு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.