இவர்களது நலனைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு தனிச்சட்டமியற்ற வேண்டும்! – சீமான்
தமிழக அரசு இணையவழிச் சேவை நிறுவனங்களில் பணிபுரியும் நிலையற்ற தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க தனிச்சட்டமியற்ற வேண்டும் என சீமான் வேண்டுகோள்.
ஸ்விக்கி, சொமேடோ, அமேசான், ஓலா, ஊபர் போன்ற இணையவழி சேவை நிறுவனங்களில் பணிபுரியும் நிலையற்ற தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு தனிச்சட்டமியற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ இணையவழி உணவு சேவை நிறுவனமான ஸ்விக்கி தனது ஊழியர்களின் ஊதியத்தைக் குறைத்தும், ஊக்கத்தொகையை நிறுத்தியும் தொழிலாளர் உரிமையைப் பறிப்பது அவர்களின் உழைப்பை உறிஞ்சும் கொடுஞ்செயலாகும். இரவு பகல் பாராது மக்கள் பசியைத் தீர்க்கும் ஸ்விக்கி ஊழியர்கள் உரிமை கேட்டு வீதியில் இறங்கிப் போராடிவருவது மிகுந்த வேதனையளிக்கிறது. கடந்த ஒரு வாரகாலமாக ஸ்விக்கி ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் அவர்களின் உரிமையைப் பாதுகாக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தமிழ்நாடு அரசின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
எனவே, தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலத்துறை மூலம் உடனடியாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி, ஸ்விக்கி ஊழியர்கள் இழந்த உரிமைகளை மீளப் பெற்றுக்கொடுத்து, அவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், ஸ்விக்கி, சொமேடோ, அமேசான், ஒலா, ஊஃபர் உள்ளிட்ட அனைத்து இணையவழிச் சேவை நிறுவனங்களில் பணிபுரியும் நிலையற்ற தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க தனிச்சட்டமியற்ற வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
ஸ்விக்கி, சொமேடோ, அமேசான், ஓலா, ஊபர் போன்ற இணையவழி சேவை நிறுவனங்களில் பணிபுரியும் நிலையற்ற தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு தனிச்சட்டமியற்ற வேண்டும்!https://t.co/rd7NVXO3r1@CMOTamilnadu @mkstalin pic.twitter.com/eFeDYnKBUv
— சீமான் (@SeemanOfficial) September 23, 2022