எல்லா திட்டத்திற்கும் பிரதம மந்திரி பேர் வைக்கிறாங்க.! நிதி மாநில அரசு கொடுக்கிறது.! நிதியமைச்சர் விமர்சனம்.!
மத்திய அரசு எல்லா திட்டத்திற்கும் பிரதான் மந்திரி திட்டம் என பெயர் வைத்து கொள்கிறது . ஆனால் அதற்கான நிதியில் பெரும்பகுதியை மாநில அரசு தான் கொடுக்கிறது. பெயர் மட்டும் மத்திய அரசு பெயரில். என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமர்சனம் செய்து இருந்தார்.
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டறிந்தனர். அதில்,’ சதீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை முழுதாக கட்டிமுடிக்கப்பட்டதையும், அதே நேரத்தில் ஆரம்பிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் இன்னும் கட்டடப்பணிகள் ஆரம்பிக்காமல் இருப்பது குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. ‘
அதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பி.டி.ஆர், ‘ மத்திய அரசு பணத்தை வைத்து அரசியல் செய்கிறது. எத்தனையோ திட்டத்திற்கு மத்திய அரசு பிரதான் மந்திரி என பிரதமர் பெயரை வைத்துவிடுகிறது . ஆனால் அப்படி ஆரம்பிக்கும் போது முதலில் 60 சதவீதம் மத்திய அரசு நிதி தரும் எனவும், 40 சதவீதம் மாநில அரசு கொடுக்க வேண்டுமே எனவும் கூறிவிடுவார்கள்.
பின்னர் அது 40 – 60 ஆகி பின்னர் 20 சதவீதம் மத்திய அரசும், 80 சதவீதம் மாநில அரசும் நிதி ஒதுக்கவேண்டிய கட்டாயம் வந்துவிடும். பயிர் காப்பீட்டு திட்டம் கூட, பிரதான் மந்திரி என ஹிந்தி பெயர் இருக்கிறது. அதற்கு 25 சதவீதம் மட்டுமே மத்திய அரசு நிதி கொடுக்கிறது. அதுவும் நாம் அனுப்பும் வரிப்பணத்தில் நமக்கு பங்கு தருகிறார்கள். மீதம் 75 சதவீதம் மாநில அரசு தான் கொடுக்கிறது. பெயர் மட்டும் பிரதான் மந்திரி திட்டம்.’ என குற்றம் சாட்டினார். ‘
மேலும் பேசுகையில், ‘ வீடு கட்டுவதற்கு கூட மத்திய அரசு மானியம் என கூறிவிட்டு, முதலில் 1 லட்சம் மத்திய அரசு கொடுக்கிறது. மீதம் 4 லட்சத்தை மாநில அரசு தான் கொடுக்கிறது. எல்லா திட்டத்திற்கும் பிரதான் மந்திரி என ஒரு ஹிந்தி பெயரை வைத்து விடுகிறார்கள். ஆனால் பெரும்பகுதி மாநில அரசு தான் கொடுக்கிறது.’ எனவும் குற்றம் சாட்டினார்.
ஜிஎஸ்டி ஆலோசனை கூட்டம் பற்றி கேட்கப்பட்டபோது, ‘ ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி ஆலோசனை கூட்டம் நடத்தியது நான் கலந்துகொண்டேன். அதில், குதிரை பந்தையம், ஆன்லைன் கேம் உள்ளிட்டவைகளுக்கு எப்படி வரி விதிப்பது என விவாதிக்கப்பட்டது. நான் தமிழக அரசு சார்பில் திட்ட வரைவு எழுதி அனுப்பினேன். மேலும், இதனை தற்போதுள்ள 31 பேரை வைத்து விவாதிக்க வேண்டிய விஷயமல்ல. அதற்கென தனி கமிட்டி ஒன்று ஆரம்பியுங்கள்.’ என கருத்து கூறினேன்.’ என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு தகவல்களை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.