இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!
சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை நேரடியாக அந்தந்த பகுதி மின்சார அலுவலகத்திலோ, அல்லது GooglePay, PhonePe போன்ற ஆன்லைன் பேமெண்ட் செயலிகள் மூலமாகவோ செலுத்திக்கொள்ள முடியும்.
தற்போது அதனை மேலும் எளிதாக்க, பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் வாட்ஸ்அப் (WhatsApp) செயலி மூலம் மின் கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம் என்ற வசதியை தமிழாடு மின்சார வாரியம் TANGEDCO தற்போது அறிமுகம் செய்துள்ளது. ஆனால் இது 500 யூனிட் அளவுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக TANGEDCO வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வாட்ஸ்ஆப் மூலம் இனி மின்கட்டணம் செலுத்தலாம் என்றும், 500 யூனிட்டுகளுக்கு மேலே பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு யுபிஐ (UPI) பரிவர்த்தனை வாயிலாக கட்டணம் செலுத்தும் வாட்ஸ் ஆப் வசதி அறிமுகம் செய்யப்பட்டுளது என்றும், இதற்காக 9498794987 இந்த வாட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், அந்த எண்ணை தொடர்பு கொள்ளும் போது அதில் அதிகாரபூர்வ எண் என குறிப்பிடும் வகையில் பச்சை நிற குறியீடு இருக்கிறதா என்பதை பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின் வாரியத்தில் பதியப்பட்டுள்ள பயனர் எண்ணில் இருந்து வாட்ஸ்அப் வாயிலாக 9498794987 என அதிகாரபூர்வ எண்ணை தொடர்புகொண்டு பின்னர், அதில் மின் பயன்பாட்டு அளவு, அதற்கான தொகை அறிந்து UPI பரிவர்த்தனை வாயிலாக மின்கட்டணம் செலுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.