“வாய்ப்புகளின் பூமியான அமெரிக்காவில் இருந்து…” முதல்வர் மு.க.ஸ்டாலின் உற்சாகப் பதிவு.!
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அமெரிக்காவில் உள்ள சான் பிராசிஸ்க்கோவிற்கு சென்றுள்ளார். அவருக்கு அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்க பயணமாக சான் பிராசிஸ்கோ மற்றும் சிகாகோ சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் எமிரேட்ஸ் விமானத்தில் சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய் வழியாக சான் பிராசிஸ்க்கோ புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவர் நேற்று அதிகாலை 2 மணியளவில் துபாய் சென்றடைந்தார்.
பின்னர், துபாயில் இருந்து முதலமைச்சர் அமெரிக்கா புறப்பட்டார். இந்திய நேரப்படி இன்று அதிகாலை அமெரிக்கா சென்ற அவருக்கு அங்குள்ள தமிழர்கள் , தொழில் அதிபர்கள், தமிழக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உட்பட பலரும் வரவேற்பு அளித்தனர். தமிழ் முறைப்படி ஆரத்தி எடுத்தும் , “Macha Swag Dance ” எனும் நடன குழுவினர் உற்சாக நடனமாடியும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர்.
மேலும், புகழ்பெற்ற சான் பிராசிஸ்க்கோ டைம்ஸ் சதுக்கத்தில் “சமூக நீதிக்காக போராடும் உண்மையான தலைவர், தமிழினப் பெருமை” என்ற வாசகத்தோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் வைத்து பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த வரவேற்பு புகைப்படங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, “வாய்ப்புகளின் பூமியான அமெரிக்காவில் இருக்கிறேன். இங்கிருந்து தமிழ்நாடு செழிக்க தொழில் முறை ஆதரவை பெற உள்ளோம்.” எனப் பதிவிட்டுள்ளார்.
இன்று முதல் சான் பிரசிஸ்கோ தொழில்துறை முதலீட்டாளர்கள் மாநாடு , அமெரிக்க வாழ் தமிழகர்களுடன் சந்திப்பு, சிகாகோவில் தொழிலதிபர்களை சந்திப்பது. அங்குள்ள தமிழர்களுடன் சந்திப்பு என பல்வேறு நிகழ்வுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்தடுத்த நாட்களில் பங்கேற்கவுள்ளார்.