காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம்.! பெங்களூருவுக்கு சென்றடைந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க பெங்களூரு சென்றடைந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கடந்த மாதம் பீகார் மாநிலம் பாட்னாவில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் , ஆம் ஆத்மி என 15 எதிர்க்கட்சிகள் 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசித்தனர். அந்த கூட்டத்தை அடுத்து இன்று மற்றும் நாளை பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆலோசனை கூட்டமானது காங்கிரஸ் கட்சி தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் இருக்கும் 24எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக சார்பில் பங்கேற்க திமுக தலைவரும் , தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு சென்ற அவர் தற்போது பெங்களூருவில் தரையிறங்கி உள்ளார்.
அங்கு அவருக்கு கர்நாடக அரசு சார்பில் வரவேற்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று மாலை கர்நாடக முதல்வர் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு சிறப்பு விருந்து அளிக்க ஏற்பாடு செய்துள்ளார். கடந்த ஆலோசனை கூட்டத்தில் ராகுல்காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே மட்டும் கலந்துகொண்ட நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்தில் சோனியா காந்தியும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.