6 நாடுகள்., 236 மாணவர்கள்., 92 ஆசிரியர்கள்.! முதலமைச்சரின் பாராட்டு மழையில் அன்பில் மகேஷ்.!

பள்ளிக்கல்வித்துறை சார்பில் "கனவு ஆசிரியர்" விருது பெற்ற 55 ஆசிரியர்கள் பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா செல்வதை குறிப்பிட்டு அமைச்சர் அன்பில் மகேஷை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.

Tamilnadu CM MK Stalin Praise Minister Anbil Mahesh

சென்னை : தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் படிப்பு மற்றும் மற்ற திறமைகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் மற்றும் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு விருதுகள், கல்வி சலுகைகள் வழங்கி கௌரவிப்பதோடு அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் வெளிநாடு இன்ப சுற்றுலாவுக்கும் அழைத்து சென்று வருகிறது தமிழக அரசு.

அண்மையில், 2023-24ஆம் கல்வியாண்டில் “கனவு ஆசிரியர்” விருது பெற்ற 55 ஆசிரியர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பெயரில் பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லவுள்ளோம் என்றும், பிரான்ஸ் நாட்டின் கல்வி நிறுவனங்களைப் பார்வையிட்டு, பண்பாடு மற்றும் கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ள கனவு ஆசிரியர்களை இன்று (நேற்று அக்டோபர் 20) திருச்சியில் சந்தித்து கலந்துரையாடி வாழ்த்துகள் தெரிவித்தோம் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தனது சமுக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

இதனை மேற்கோள் காட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அதில், ” திரைகடல் ஓடியும் திரவியம் தேடு., கடல் தாண்டி நாம் பெறும் பெருஞ்செல்வம் கல்வியைத் தவிர வேறொன்று உண்டா?

அத்தகைய கல்வியின் சிறப்பை நமது தமிழ்நாட்டின் மாணவச் செல்வங்களும் – ஆசிரியப் பெருமக்களும் உணர்ந்து கல்வி வேட்கை கொள்ள மேற்கொள்ளும் நமது திராவிட மாடல் அரசின் சிறப்பான முன்னெடுப்பு!

இந்தப் பதிவு குறித்து நான் தம்பி அன்பில் மகேஷ் அவர்களிடம் பேசியபோது, இதுவரையில் எத்தனை மாணவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளோம் எனக் கேட்டேன். ஆறு நாடுகளுக்கு 236 மாணவர்களை அழைத்துச் சென்றுள்ளதாகவும், இந்தப் பயணத்துடன் 92 ஆசிரியர்களும் இந்த வாய்ப்பினைப் பெற்றதாகவும் கூறினார். இதைக் கேட்டதும் மகிழ்ச்சியால் என் நெஞ்சம் நிறைந்தது

இந்த முன்னெடுப்புகளைச் செய்துவரும் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுக்கும், அவருக்குத் துணை நிற்கும் துறை அதிகாரிகளுக்கும் வாழ்த்துகள்.” என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்