நன்றி., மீண்டும் வருக.! முதலமைச்சரை வழியனுப்பி வைத்த அமெரிக்க தமிழர்கள்.!
17 நாட்கள் அமெரிக்கப் பயணமாக சென்றிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சிகாகோவில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார்.
சென்னை : தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சான் பிரான்சிஸ்கோ புறப்பட்டார். அடுத்த நாள் ஆகஸ்ட் 28இல் சான் பிரான்சிஸ்கோ சென்றடைந்த முதல்வருக்கு அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதன்பிறகு சான் பிராசிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் கலந்துகொண்டார். அந்த மாநாட்டில் பன்னாட்டு தொழில் நிறுவன அதிகாரிகள் முன்னிலையில், தமிழகத்தில் தொழில் தொடங்க, தங்கள் தொழிலை விரிவுபடுத்த அழைப்பு விடுத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பின்னர், நோக்கியா, பே-பால் உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. இதனை தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி சான் பிராசிஸ்கோவில் இருந்து சிகாகோ புறப்பட்டார். அங்குள்ள தமிழர்களும் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சிகாகோவில் உள்ள பிரபல பன்னாட்டு நிறுவனங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்புகளை நிகழ்த்தி தமிழகத்தில் முதலீடு மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். இதனால் தமிழகத்திற்கு சில ஆயிரம் கோடிகளுக்கும் அதிகமாக முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இப்படியான 17 நாட்கள் அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று சிகாகோவில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னைக்கு புறப்படுகிறார். அவரை வழியனுப்ப சிகாகோ விமான நிலையத்தில் அமெரிக்க வாழ் தமிழர்கள் ஒன்றுகூடி “நன்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வருக” என்ற பதாகைகளை ஏந்தி வழியனுப்பினர்.