மகளிர் உரிமைத்தொகை : புதிதாக 7.35 லட்சம் பயனாளிகள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கம்.!
ஆளும் திமுக அரசு, கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தலில் குறிப்பிட்ட மிக முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று மகளிருக்கு 1000 ரூபாய் உரிமை தொகை திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற தமிழகத்தில் இருந்து முதற்கட்டமாக 1.63 கோடி பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
1.63 கோடி பேரில் இருந்து 1.06 கோடி பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கலைஞர் உரிமை தொகை திட்டம் மூலம் மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15 , மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் துவங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ், பயன்பெற விரும்பும் தகுதியுள்ள மகளிர் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்து அறிவிப்பாணை வெளியிட்டது. அதன்படி, லட்சக்கணக்கான மகளிர் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மேல்முறையீடு செய்தவர்களில் இருந்து 7.35 லட்சம் மகளிர் , உரிமை தொகை திட்டத்தில் சேர தகுதியானவர்கள் என சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிமை தொகை வழங்கும் திட்டமானது இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் துவங்கப்பட உள்ளது.
இன்று, சென்னை கலைவாணர் அரங்கில் காலை 10.30 மணி அளவில் நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் 2ஆம் கட்டத்தை துவங்கி வைக்கிறார். இதன் மூலம் தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் மகளிர் எண்ணிக்கையானது 1கோடியே 13 லட்சத்து 84 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை துவங்கி வைப்பது போல மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் துவங்கி வைக்க உள்ளனர். வழக்கமாக மாதந்தோறும் 15ஆம் தேதி வழங்கப்படும் உரிமை தொகையானது, இந்த மாதம் தீபாவளியை முன்னிட்டு முன்கூட்டியே வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.