“ஜோசியகாரர் பழனிச்சாமி., செல்லாக் காசு பழனிச்சாமி.,” மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!
விரக்தியின் உச்சியில் ஜோசியக்காரராக மாற்றிவிட்ட பழனிச்சாமி, திமுகவின் செல்வாக்கு சரிந்து கொண்டிருப்பதாக தொடர்ந்து பேசி வருகிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னை : இன்று கும்மிடிப்பூண்டி தொகுதி திமுக எம்எல்ஏ கீ.வேணுவின் இல்ல திருமணவிழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுக பற்றியும் , திமுக கூட்டணி பற்றியும் கூறிய பல்வேறு விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக பேசினார்.
அவர் கூறுகையில், ” மக்களால் போற்றப்படும் ஆட்சியாக திமுக உள்ளது. மக்களால் ஓரங்கட்டப்பட்ட கட்சியாக அதிமுக உள்ளது. திமுகவின் செல்வாக்கு வளர்ந்து கொண்டு வருவதால் எடப்பாடி பழனிச்சாமிக்கு பொறாமை ஏற்பட்டுள்ளது. செல்லாக் காசாக இருக்கும் பழனிச்சாமி, திமுகவின் செல்வாக்கு சரிந்து கொண்டிருப்பதாக தொடர்ந்து பேசி வருகிறார். திமுக கூட்டணி உடையப் போகிறது என கற்பனையில் பேசி வருகிறார் என பார்த்தால் தற்போது அவர் ஜோசியகாரராகவே மாறிவிட்டார்.
விரத்தியின் உச்சியில் ஜோசியராக மாறிய பழனிசாமியை பார்த்து பார்த்து நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, எங்களுடைய கூட்டணி என்பது தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணியல்ல. எங்கள் கூட்டணி என்பது பதவிக்கு வர வேண்டும் என உருவாக்கப்பட்ட கூட்டணியல்ல. கொள்கைக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி. எங்கள் கூட்டணிக்குள் விவாதம் நடக்கும். எங்களுக்குள் பேச்சுக்கள் நடக்கலாம். விவாதங்கள் ஏற்படுவதால் விரிசல் ஏற்பட்டு விடுகிறது என யாரும் கருதி விடக்கூடாது. பக்கத்து வீட்டில் என்ன தகராறு என எட்டிப்பார்ப்பது போல, பக்கத்து கட்சியில் என்ன நடக்கிறது என பார்த்து கொண்டிருக்கிறார் எடபப்பாடி பழனிச்சாமி. தன்னுடைய கட்சியை வளர்ப்பதற்கு வக்கில்லை, வளர்ந்த நம் திமுக அரசை பார்த்து இன்று ஜோசியம் செய்து கொண்டிருக்கிறார்.
திமுகவை பொருத்தவரை எதிர்க்கட்சியாக இருந்தபோதும் சரி, மக்களை சந்தித்தோம் இப்போது ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போதும் அதேபோல் மக்களை சந்தித்து அவர்களுக்கு என்ன பிரச்சனை என்பதை கேட்டு அறிந்து செயல்பட்டு வருகிறோம். சென்னையில் மழை வந்தது. முதலமைச்சராக இருந்த நான் வந்தேன். துணை முதலமைச்சராக இருந்த தம்பி உதயநிதி வந்தார். அமைச்சர்கள் வந்தார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் வந்தார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்தார்கள். உள்ளாட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைவரும் மக்களை தேடி வந்தார்கள். குறைகளை கேட்டறிந்தார்கள். பிரச்சனைகளை தீர்த்து வைத்தார்கள் இது திமுக.
மழை வந்தவுடன் சேலத்துக்கு சென்று பதங்கியவர் பழனிச்சாமி. ஆட்சியில் இருக்கும் போதும் வரமாட்டார். ஆட்சியில் இல்லாத போதும் வரமாட்டார். ஏதோ கனவு கண்டு கொண்டிருக்கிறார். ஜோசியம் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒன்றை மட்டும் நான் உறுதியாக கூறிக் கொள்கிறேன். திமுக 2026இல் பெரும் வெற்றியை தொடர்ந்து வரும் எந்த தேர்தல் வந்தாலும் திமுக தான் வெற்றி பெரும்.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.