உதயநிதிக்கு கிரீன் சிக்னல்.? “ஏமாற்றம் இருக்காது” மு.க.ஸ்டாலின் ‘பளீச்’ பதில்.!
அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு, "மாற்றம் இருக்கும்., ஏமாற்றம் இருக்காது " என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் இன்று பதிலளித்துள்ளார்.
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த நலத்திட்ட நிகழ்வை அடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அவர் கூறுகையில், “கொளத்தூர் எனது சொந்த தொகுதி., எப்போது நினைத்தாலும் இங்கு வந்து செல்வேன்” எனக் கூறினார். பின்னர் அவரிடம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா.? அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்படுமா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அமைச்சரவையில் மாற்றம் இருக்கும். ஏமாற்றம் இருக்காது ” எனக் கூறிவிட்டு சென்றார்.
முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கு முன்னர், இதேபோல, துணை முதலமைச்சராக உதயநிதியை அறிவிக்க திமுகவினர் கோரிக்கை வைத்து வருவது குறித்து கேட்கப்பட்டது. அப்போது பதில் அளித்த முதலமைச்சர், “கோரிக்கை வலுத்துள்ளது., இன்னும் பழுக்கவில்லை.” என பதில் அளித்திருந்தார்.
தற்போது அளித்த பேட்டியில், “ஏமாற்றம் இருக்காது” என பதிலளித்துள்ளார். இதனால் , நிச்சயம் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்படுவார் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஏற்கனவே, கடந்த வாரம் அமைச்சரவை மாற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூத்த அமைச்சர்கள், எம்.பிகளுடன் ஆலோசனை நடத்தினர். அன்றைய தினமே அமைச்சரவை மாற்றம், துணை முதலமைச்சர் விவகாரம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டது.
ஆனால் , தற்போது வரையில் அமைச்சரவை மாற்றம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. இப்படியான சூழலில் முதலமைச்சரின் “மாற்றம் இருக்கிறது” என்ற பதில் இன்னும் அமைச்சரவை மாற்றம் குறித்த பேச்சுக்களை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.