தமிழிசை அவர்களே! இதுதான் இறுமாப்பு..! – ஆளுநர் தமிழிசையின் கருத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி பதிலடி..!

Default Image

மக்கள் பெயில் ஆக்கினாலும் பிரதமர் பாஸ் போட்டு நாங்கள் ராஜ் பவனில் உட்கார்ந்து விடுவோம் என்பதே இறுமாப்பு என தமிழிசை கருத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி பதில். 

ஆளுநர் தமிழிசை கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தமிழக மக்கள் எங்களை போன்ற நிர்வாக திறன் உள்ளவர்களை அங்கீகரிக்கவில்லை. ஆனால் மத்திய அரசு திறமையானவர்களை அடையாளம் கண்டு கொள்கிறது. பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் எங்களது திறமைகளை அடையாளம் கண்டு ஆளுநராக நியமித்துள்ளனர் என தெரிவித்திருந்தார்.

அது போலிச் சான்றிதழ் இல்லையா?

இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி, ராஜ்பவன்கள் எல்லாம் பெயிலானவர்கள் படிக்கிற டுடோரியல் கல்லூரிகள் என்கிறீர்களா தமிழிசை அவர்களே. பரிட்சையில் பெயில் ஆன பிறகு பிரதமர் பாஸ் போட்டு விட்டார் எனில் அது போலிச் சான்றிதழ் இல்லையா? கேள்வி எழுப்பி இருந்தார்.

தமிழிசை பதில்

சு.வெங்கடேசன் எம்.பி-யின் கருத்துக்கு ஆளுநர் தமிழிசை அவர்கள், ராஜ்பவன்கள் டுடோரியல் ஆக உள்ளது என்று வெங்கடேசன் சொல்கிறார். டுடோரியல் ஒன்றும் கேவலமான இடமல்ல. அதுவும் கல்வி பயிலும் புனிதமான இடம் தான்.  டுடோரியலில் படிப்பவர்கள் கூட படித்து அறிவாற்றல் பெற்று தேர்வாகிறார்கள் – தங்களைப் போல அறிவாலய வாசலில் நின்று பெற்றது அல்ல.

தேர்தல் வெற்றி மட்டுமே ஒருவருக்கு அங்கீகாரம் கிடையாது. ராஜ்பவன்கள் பயிற்சி பட்டறைகளாக இருக்கலாம். அரண்மனை வாரிசுகளை உருவாக்கும் இடமாக இல்லை என்பதில் பெருமையே. நேற்று வென்றவர்கள் நாளை தோற்கலாம். நேற்று தோற்றவர்கள் நாளை வெல்லலாம். இறுமாப்பு வேண்டாம்.

ஆளுநர் ஆவதற்கும் பல சிறப்பு தகுதிகள் வேண்டும். அதைப்போன்ற தகுதிகளை தாங்கள் பெறப்போவதில்லை. மறுபடியும் சொல்கிறேன் இறுமாப்பு வேண்டாம் என தெரிவித்திருந்தார்.

சு.வெங்கடேசன் எம்.பி பதில் 

ஆளுநர் தமிழிசையின் கருத்துக்கு பதிலளித்த சு.வெங்கடேசன் எம்.பி, நீங்கள் மக்களை கேவலப்படுத்தியதால் அந்த கேள்வி வந்தது தமிழிசை அவர்களே.  நான் டுடோரியலை  கேவலமாக சொல்லவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.  மக்கள் பெயில் ஆக்கினாலும் பிரதமர் பாஸ் போட்டு நாங்கள் ராஜ் பவனில் உட்கார்ந்து விடுவோம் என்பதே இறுமாப்பு. அதுவே கேள்வி.

கேள்வியை விட்டு விட்டு வேறு ஏதாவது பதில் பேசினால் கூட பரவாயில்லை. எந்த தரத்திற்கு இறங்கி பேசியிள்ளீர்கள்? இது தான் ராஜ்பவன் பட்டறையில் பெற்ற பயிற்சியா தமிழிசை அவர்களே!’ என தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்