சென்னையில் கள்ள ஒட்டு.? மீண்டும் வாக்குப்பதிவு நடத்தணும்.! தமிழிசை புகார்.!
Election2024 : தென்சென்னையில் 13வது வாக்குசாவடியில் கள்ள ஓட்டு போட்டுள்ளனர் அதனால் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த தமிழிசை கோரிக்கை வைத்துள்ளார்.
நாடாளுமன்ற முதற்கட்ட வாக்குபதிவில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதுவரை வெளியான வாக்குசதவீத தகவல்கள் அடிப்படையில், அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48% வாக்குகளும், குறைந்தபட்சமாக தென் சென்னையில் 54.27% வாக்குகளும் பதிவாகியது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படியான சூழலில் தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று தென்சென்னை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சென்று புகார் அளித்தார். புகார் அளித்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது, கள்ள ஒட்டு விவகாரம், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் என பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.
அவர் கூறுகையில், தேர்தல்நாளை, வெள்ளிக்கிழமை, திங்கள்கிழமைகளில் வைக்க வேண்டாம் என நான் ஆளுநராக இருந்த சமயத்தில் இருந்தே கூறி வருகிறேன். அப்படி வைக்கும் போது பலரும் சனி, ஞாயிறு சேர்த்து தொடர் விடுமுறை தினங்கள் என எடுத்துக்கொண்டு வாக்களிக்க ஆர்வம் காட்டுவதில்லை.
தேர்தல் ஆணையம் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கோடிக்கணக்கில் செலவு செய்து விளம்பரம் செய்து வந்தது. ஆனால் அதில் எந்த பயனும் இல்லை. கடந்த தேர்தலை விட இந்த முறை குறைவாகவே வாக்குகள் பதிவாகியுள்ளது. விளம்பரத்தில் கவனம் செலுத்துவதை விடுத்து, வாக்காளர்கள் பட்டியலை சரிபார்க்கலாம். பல இடங்களில் வாக்காளர்கள் தங்கள் பெயர் இல்லை என பல்வேறு குளறுபடிகளால் வாக்களிக்க முடியாமல் திரும்பி செல்லும் நிலை உருவானது.
பலருக்கும் சேலஞ்ச் ஓட்டு எனப்படும் 49ஏ வாக்குரிமை மறுக்கப்பட்டது. குறிப்பாக தென் சென்னையில் பாஜகவுக்கு ஆதரவான 199, 200, 201, 202 ஆகிய பாகங்களில் உள்ள பல்வேறு வாக்குகள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 13வது வாக்குச்சாவடியில் முகவர்களை வெளியில் அனுப்பிவிட்டு கள்ள ஓட்டுகள் போடப்பட்டன. அதனால் அந்த வாக்குச்சாவடியில் மீண்டும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என புகார் அளித்து உள்ளதாக தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.