விஜய்க்கு சூசகமாக அழைப்பு விடுத்த தமிழிசை! அதிருப்தி பேச்சுக்கு பின்னால் இருக்கும் அரசியில்!
தேசிய சாயலில் தான் கட்சிகள் வர வேண்டுமென தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜயை குறித்து விமர்சனம் செய்து தமிழிசை சௌந்தரராஜன் பேசி உள்ளார்.
சென்னை : திமுக சாயலில் இன்னொரு அரசியல் கட்சி தேவை இல்லை எனவும் தேசிய சாயலில் தான் தமிழ்நாட்டில் கட்சி வர வேண்டும் எனவும் தமிழிசை சவுந்தராஜன் பேசி இருக்கிறார். முன்னதாக சென்னை, தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய தமிழிசை பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் தவெக கட்சி தலைவரான விஜயையும் விமர்சித்து பேசியுள்ளார்.
இது குறித்து அவர் பேசிய போது, “தமிழக பாஜக மட்டுமல்லாமல் தமிழக மக்கள் சார்பிலும் மூன்றாவது முறையாக இந்தியாவை வலிமையாக வழிநடத்திக் கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம்.
அதே போல், 100 நாட்களைக் கடந்து சிறப்பாக ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதற்கும் நம் பிரதமருக்கு வாழ்த்துகள்”, என பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தமிழிசை தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர், “நடிகர் விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பே திராவிட சாயலில் பயணிப்பதுபோல் தெரிகிறது.
திராவிட சாயலில் இன்னொரு கட்சி தமிழகத்திற்கு தேவையில்லை. தேசிய சாயலில்தான் கட்சிகள் இனி இங்கு வரவேண்டும். விஜய் திராவிட கட்சிகள் பாணியில் பயணிக்காமல், வேறு பாணியில் பயணிப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவரும் அப்படித்தான் என காட்டிவிட்டார்.
அவரும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காதது, இருமொழிக் கொள்கையை ஆதரிப்பது என திராவிட கட்சிகளின் பாணியில் பயணிக்கிறார். திமுக பாதையில் விஜய் திராவிட சாயலை சாயமாக பூசிக் கொண்டார். சாயம் வெளுக்கிறதா அல்லது வேறொரு சாயத்தை பூசி கொள்வாரா என்பது போகப் போக தான் தெரியும்.
விஜய்யின் திரைப்படங்கள் தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியாகி லாபம் பார்க்க வேண்டும். ஆனால், மக்களுக்கு, படிப்பிற்கு, வளர்ச்சிக்கு பல மொழி தேவையில்லை என்று இருமொழிக் கொள்கையை ஆதரிக்கிறார்.
மேலும், அவரின் ஒரு திரைப்படத்தை திரையிட விடவில்லை, கட்சியின் மாநாட்டை நடத்த விட அனுமதிக்கவில்லை. அவர் தேசிய பக்கம் வந்தால் கூட பரந்த நிலைப்பாட்டோடு அழைத்துச் செல்வோம். ஆனால் திராவிட சாயத்தை பூசிக்கொள்வது விஜய்க்கு நல்லதல்ல”, என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறி இருக்கிறார்.