வரும் 7ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்.. முடிவு 9ஆம் தேதி.! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.!  

Default Image

திமுக தலைவர் பொறுப்புக்கு வரும் 7ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும், வரும் 9ஆம் தேதி பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். 

திமுக கட்சியில் தற்போது உட்கட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, மாவட்ட செயலாளர்கள், ஊராட்சி, பேரூராட்சி, கிராம பகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, திமுக தலைவர், செயலாளர், பொருளாளர் போன்ற முக்கிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பொறுப்புகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் போட்டியிட உள்ளனர் என கூறப்பட்ட நிலையில், இதில் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது அது குறித்து முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில், தான் வரும் அக்டோபர் 7ஆம் தேதி தலைவர் பொறுப்புக்கான தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன். 9ஆம் தேதி சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பொதுக்குழு நடைபெற உள்ளது. அன்று முக்கிய நிர்வாகிகள் அறிவிக்கப்படுவர் எனவும் அறிவித்துள்ளார்.

அதில் குறிப்பிடபட்டுள்ளது யாதெனில், ‘ அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.  தி.மு.கவின் 15-ஆவது அமைப்புத் தேர்தல் மாவட்ட – ஒன்றிய – நகர – பேரூர் – கிளைக் கழகங்கள் என அனைத்து நிலைகளிலும் நிறைவுபெற்றுவிட்டன.

தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான பொதுக்குழு அக்டோபர் 9-ஆம் தேதி சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி ‘விங்க்ஸ்’ கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவிருக்கிறது. கழகத் தலைவர் என்ற பொறுப்புக்கு அக்டோபர் 7-ஆம் நாள் வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கிறேன். உள்கட்சி ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில், இந்தியாவில் உள்ள கட்சிகள் பலவற்றுக்கும் எப்போதும் வழிகாட்டியாக இருப்பது நம் திமுக இயக்கம்.

கழகத்தின் உள்கட்டமைப்பு ஜனநாயக முறைப்படி ஒழுங்குபடுத்தப்பட்டு, தொடர்ந்து பாதுகாக்கப்படுவதால்தான், வலிவோடும் பொலிவோடும் திகழ்ந்து, இன்று தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதுடன், நம்முடைய திராவிட மாடல் ஆட்சித்திறனை, இந்தியாவின் பிற மாநிலங்களும் ஏற்றுப் போற்றிப் பாராட்டுகின்ற வகையில் சீராகச் செயலாற்றி வருகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கவின் சிறப்பான பங்களிப்பை இந்தியாவே எதிர்பார்த்திருக்கிறது.

கழக அமைப்புகளில் உள்ள பொறுப்புகளுக்குப் போட்டியிட விரும்புகிறவர்கள் தங்களின் விருப்பத்தை வெளிப்படுத்தி மனு தாக்கல் செய்வது வழக்கம். ஒரு மாவட்டத்திற்கு ஒரு செயலாளர்தான் என்பதை மனு தாக்கல் செய்த ஒவ்வொருவருமே அறிவார்கள். தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் முன்னிலையில் அவர்களின் விருப்பமும், வாய்ப்பும் பரிசீலிக்கப்பட்டு, தேவையென்றால் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறுவதும், அதற்கான அவசியம் ஏற்படாத நிலையில், ஒருமனதாக ஒருவரைத் தேர்வு செய்வதும் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் உருவாக்கிய வழிமுறையின்படி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனைத் தெரிந்தும் தெரியாதது போல, நம்மைவிடக் கழகத்தின் மீதும் அதன் வளர்ச்சியின் மீதும் கூடுதல் அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் வகையில், கழக அமைப்புத் தேர்தல் முறைகளை வலிந்து எதிர்மறை விமர்சனம் செய்தும், வாய்ப்பு பெற்ற ஒரு சிலருக்கு எதிராக மற்றவர்களைத் தூண்டிவிடத் துணைபோகும் வகையிலும், செய்திகள் வழியே செயல்படும் போக்கு இன்று மட்டுமல்ல, நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் காலத்திலும் நடைபெற்றதை மறந்துவிட முடியாது.

வாக்குப்பதிவு மூலம் தேர்தல் நடைபெற்று நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் கடைப்பிடிக்கப்பட்ட முறையையாவது பாராட்டியிருக்கிறார்களா என்றால் அதுவும் இருக்காது.  ‘இருதரப்பிலும் கடும் மோதல்‘, ‘ஆதரவாளர்கள் தாக்குதல்‘, ‘உள்கட்சி உள்குத்து – வெளிக்குத்து’ என்றுதான் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுக்கும் நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் உள்ளாட்சிப் பொறுப்பிலே இருக்கக்கூடிய கழக நிர்வாகிகளுக்கும் நான் ஏற்கனவே செப்டம்பர் 26-ஆம் நாளன்று ஓர் அறிக்கை வாயிலாக அன்புக்கட்டளை விடுத்திருக்கிறேன்.

அதனை மீண்டும் நினைவூட்டுகிறேன். எக்காரணம் கொண்டும் சொல்லிலும் செயலிலும் அலட்சியமான போக்கு வேண்டாம். இரண்டையும் கவனத்துடன் கையாளுங்கள். நம்மிடமிருந்து வெளிப்படும் சொற்கள், அதனை வெளிப்படுத்தும் உடல்மொழி, நம்மை நாடி வரும் மக்களை அணுகும் முறை என அனைத்திலும் கவனமுடனும் பொறுப்புடனும் கண்ணியம் துளியும் குறைந்து விடாமல் செயலாற்றுங்கள்.

அவர்களைவிட உள்ளாட்சி பிரதிநிதிகள் அதிகளவில் மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்டவர்கள். அவர்கள் இன்னும் கூடுதல் பொறுப்புடனும் பொறுமையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.அதையும் மீறி செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுத்திட சிறிதும் தயங்க மாட்டேன் என்பதைக் கண்டிப்புடன் நினைவூட்டிட விரும்புகிறேன்.

தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும் நமக்கு ஊட்டியுள்ள திராவிட உணர்வுடன் தமிழ்நாடு தலைநிமிர்ந்திட, தமிழர்களின் வாழ்வு செழித்திட, செம்மொழித் தமிழ் செம்மாந்து திகழ்ந்திட, கழகமும் கழக அரசும் தொடர்ந்து பாடுபடும். அதற்கான ஊக்கத்தைப் பெற்றிடும் வகையில் கழகத் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், துணைப் பொதுச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர் உள்ளிட்டோரைத் தேர்வு செய்யும் பொதுக்குழு அக்டோபர் 9-ஆம் நாள் ஞாயிறு அன்று கூடுகிறது.

ஞாயிறு என்றாலே சூரியன்தான். உதயசூரியன் வெளிச்சத்தால் தமிழ்நாட்டில் விடியல் ஏற்பட்டுள்ள நிலையில், அதன் கதிரொளி எத்திசையும் பரவிடும் வகையில் செயல்படுவதற்கான தீர்மானங்களை நிறைவேற்றவிருக்கும் பொதுக்குழுவில், உயிரனைய உடன்பிறப்புகளை நானும், உங்களில் ஒருவனான என்னை நீங்களும் காணவிருக்கிறோம். ஒரு தாய் மக்களாய் – ஒரு கொள்கைக் குடும்பத்துச் சொந்த பந்தங்களாய் – பொதுக்குழுவில் நாம் காண்போம் ! தமிழ்ப் பொதுமக்கள் நலன் தவறாது காப்போம். என அந்த அறிக்கையில் தமிழக முதல்வரும்  திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை மூலம் தொண்டர்களுக்கு தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - AUS vs IND
SPVelumani
Seeman - Rajini
goat vijay sk rajinikanth
Wikki Nayan
AUS vs IND - Session 1