நீண்ட நாள் கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ளது – வேல்முருகன்
வன்னியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசுப் பணி நியமனங்களிலும், கல்வி வாய்ப்புகளிலும் பயன்பெறும் வகையில் சிறப்பு ஒதுக்கீடு வழங்கி முதலமைச்சர் முக ஸ்டாலின் அரசாணை வெளியிட்டு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, வன்னியர்கள் 10.5%, சீர்மரபினர் 7%, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5% என சிறப்பு ஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், எம்எல்ஏயுமான வேல்முருகன் இன்று காலை 11.00 மணியளவில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், முதல்வருமான முக ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன் எம்எல்ஏ, வன்னியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ளது. இதற்காக போராடிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன். அதிமுக அரசு அரசனை வெளியிட்டு, சட்டம் ஏற்றியதோடு தேர்தல் அதிகாரத்திற்கு சென்றுவிட்டது.
அதனால் ஒரு வன்னியர்கள் கூட தமிழ்நாட்டில் இதுவரை பயன்பெறவில்லை. இனி தமிழ்நாட்டில் ஓராயிரம் வன்னியர்கள் பயன்பெற்றாலும் அல்லது ஒரு கோடி வன்னியர்கள் பயன்பெற்றாலும் அது திமுக ஆட்சியில் தான் நடைமுறைப்படுத்த முடியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.