Tamil News Today Live: ஒடிசா ரயில் விபத்து..சிபிஐ வழக்குப்பதிவு..!
ஒடிசா ரயில் விபத்து:
ஒடிசா பாலசோரில் நடைபெற்ற ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே அமைச்சகத்தின் கோரிக்கையை ஏற்று விசாரணை செய்யவுள்ள சிபிஐ வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி:
அகில இந்திய அளவில் வெளியிட்டுள்ள கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. இந்தியாவில் உள்ள முதல் 100 பல்கலைக்கழகங்களில், 20 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் உள்ளவை, முதல் 100 கல்லூரிகளில், 30 தமிழ்நாட்டில் இருப்பவை. எல்லா தரவரிசைகளிலும் தமிழ்நாட்டின் கல்வி நிறுவனங்கள் முன்னிலை வகிக்கும் சூழலில், பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கக்கூடிய ஆளுநர் எப்படி இந்த உண்மைகளை மறைத்துவிட்டு பேசுகிறார் என தெரியவில்லை என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டியளித்துள்ளார்.
ரயில்வே அமைச்சர் ராஜினாமா:
பாலசோர் ரயில் விபத்தினால் ஏற்பட்ட சேதத்தை மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ரயில்வே அமைச்சர் எடுத்துள்ளார். ஓய்வின்றி உழைத்து வருகிறார். விசாரணை முடியட்டும். அமைச்சர் தன்னால் முடிந்ததைச் செய்கிறார், இந்த நிலையில் அவரை ராஜினாமா செய்யக் கோருவது புத்திசாலித்தனம் அல்ல என்று ஜேடிஎஸ் தலைவர் ஹெச்.டி.தேவேகவுடா கூறினார்.
கோளாறு இருந்தால் ரயில்வே வாரியத்திடம் தெரிவிக்க வேண்டும்:
ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து, சிக்னல் கருவிகள், லாக்கிங் கருவிகள் என அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று ஒருவாரம் தொடர்ந்து சோதனை செய்ய வேண்டும். அதில் ஏதேனும் கோளாறு இருந்தால் வரும் 14ஆம் தேதிக்குள் அதனை ரயில்வே வாரியத்திடம் தெரிவிக்க வேண்டும் என ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் ஆய்வு:
டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 9ம் தேதி நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். பாசனத்துக்காக மேட்டூர் அணையில் ஜூன் 12-ஆம் தேதி நீர் திறக்கப்பட்டு, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுத்துறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி தொடங்கும் நிலையில் முதல்வர் ஆய்வு செய்ய உள்ளார்.
விசாரணையை தொடங்கியது சிபிஐ:
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக, விசாரணையை தொடங்கியது சி.பி.ஐ. 10 பேர் அடங்கிய குழு, விபத்து நடந்த பாஹாநாகா ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரயில்வே வாரியத்தின் பரிந்துரையின்படி, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விபத்து எப்படி நடந்தது என்பதை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சைலேஷ் குமாரும் விசாரித்து வருகிறார்.