தமிழ்ப்புத்தாண்டு 2025 : கோயில்களில் சிறப்பு பூஜைகள்.., பக்தர்கள் சாமி தரிசனம்!
இன்று தமிழ் மாதம் சித்திரை முதல் நாளில் தமிழ்ப்புத்தாண்டாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் அதிகாலை முதலே பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சென்னை : இன்று தமிழ் மாதம் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு தினமாகவும் பலரால் கொண்டாடப்படுகிறது. சித்திரை முதல் நாளில் அதிகாலை முதலே தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருநெல்வேலி மணிமூர்த்தீஸ்வரத்தில் உள்ள உச்சிஸ்ட கணபதி கோயிலில் சித்திரை முதல் நாளில் மட்டும் சுவாமி மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நடைபெறும். இதனைக் காண அப்பகுதியில் உள்ள பக்தர்கள் மணிமூர்த்தீஸ்வரம் குவிந்துள்ளனர். காலை முதலே சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மாலையில் உச்சிஷ்ட மஹா கணபதிக்கும், நீலவேணி அம்பாளுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.
சித்திரை முதல் நாளை முன்னிட்டு திருவண்ணாமலை மாட வீதியில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பூத நாராயண பெருமாள் கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இக்கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு குபேர வடிவில் காட்சி தரும் ஸ்ரீ பூத நாராயண பெருமாளுக்கு பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலையன் கோயிலில் சித்திரை முதல் நாளை முன்னிட்டு தாணுமாலையனுக்கு காய், கனிகளை வைத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனை பக்தர்கள் காலை முதல் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அதேபோல் திருச்செந்தூர் முருகன் கோயில், வடபழனி முருகன் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உள்ளிட்ட தமிழ்நாட்டில் பிரசித்திபெற்ற பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.