வணிக நிறுவனத்தில் தமிழ் பெயர் பலகை கட்டாயம் – அமைச்சர் சாமிநாதன்
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களின் சிலையினை ஆய்வு செய்த தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி உள்ளிட்ட அமைச்சர்கள், சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் சாமிநாதன், தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் கட்டாயம் இடப்பெற வேண்டும் என்றும் தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது எனவும் கூறினார்.
இதுபோன்று, தமிழக அரசு அலுவலகங்களில் அலுவலர்கள் தமிழில் தான் கையொப்பம் இடவேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை மீறுவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார். மேலும் அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் தற்போதைக்கு செம்மொழி மாநாடு நடத்துவதற்கான திட்டம் இல்லை, ஆனால் அதே நேரத்தில் பல்வேறு நாடுகளில் தமிழ் இருக்கைகள் அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.