2015இல் இருந்தே இப்படித்தான்., மழை அப்டேட் கொடுக்கும் வெதர் மேனுக்கு வந்த சோதனை.!
2015 முதல் இப்போது வரை இரு அரசுகளிலும் இதுதான் நிலைமை என தன் மீதான அரசியல் விமர்சனத்திற்கு விளக்கம் கொடுத்துள்ளார் தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப் ஜான்.
சென்னை : வடகிழக்கு பருவமழை தற்போது தமிழ்நாட்டில் தொடங்கி சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது வலுப்பெற்று வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இதனால் நாளை மற்றும் நாளை மறுநாள் அந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இப்படியான வானிலை அப்டேட்களை மத்திய, மாநில அரசாங்கத்தின் வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பது போல சில தனியார் வானிலை ஆர்வலர்களும் தெரிவித்து வருகின்றனர். அப்படி தமிழகத்தில் பிரபலமாக பார்க்கப்படும் வானிலை ஆர்வலராக பிரதீப் ஜான் என்பவர் இருக்கிறார். இவர் மழை பற்றிய அப்டேட்களை தனது இணையதள பக்கமான Tamil Nadu Weatherman எனும் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதே போல சில தனியார் சேனல்களில் பேட்டியளித்தும் மழை அப்டேட் கொடுத்து வருகிறார்.
அப்படி தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப் ஜான் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளிக்கையில், ” ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட பகுதிகளில் 20 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. அந்த மழைநீர் வடிவதற்கு குறைந்தது 6 மணி நேரம் ஆகும்.” என கருத்து கூறியிருந்தார். இந்த கருத்து இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியது. இவர் குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாக கருத்து கூறி வருகிறார் என்றெல்லாம் கருத்துக்கள் இணையத்தில் உலாவ ஆரம்பித்துவிட்டன.
இந்த வீண் வதந்திகள் குறித்து, தற்போது பிரதீப் ஜான், தான் வானிலை அப்டேட் அளிக்கும் Tamil Nadu Weatherman இணையதள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், ” என்மீது அரசியல் முத்திரை குத்த முயற்சிக்கும் அனைவருக்கும் நான் கூறிக்கொள்வது என்னவென்றால், யாராவது என்னிடம் மழை பற்றிய அப்டேட் கேட்டால். எனக்கு தெரிந்ததை நான் வழங்குகிறேன். கடந்த 2015 முதல் இப்போது வரை இரு அரசுகளிலும் (அதிமுக , திமுக) இதுதான் நிலைமை.
நான் ஹைட்ராலஜி (நீரியல்) தொடர்பான திட்டங்களில் பணிபுரிந்து வருகிறேன். சென்னை மாநகராட்சியில் உள்ள நீர்நிலை அமைப்புகள் மற்றும் அதன் வடிகால் அமைப்பு குறித்து எனக்கு தெரியும். கடந்த ஒரு வாரமாக என் உடல்நிலை மோசமாக இருந்தது. இருந்தாலும், என்னால் முடிந்ததைச் செய்து வருகிறேன். இதனை செய்ய வேண்டும் என எனக்கு எந்தக் கடமையும் இல்லை.
Blog பதிவிடுபவர்கள் மழையைப் பற்றிக் கூறுவதில்லை. நான் எனக்கு அறிந்த மழை பெய்யும் வாய்ப்பு பற்றி கூறுகிறேன். அமழை பற்றி அறிந்து தேவைப்படும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வானிலை ஆய்வாளர்கள் போல வானிலை முன்னெச்செரிக்கைகளை யாராலும் பகுப்பாய்வு செய்ய முடியாது. நாம் மழை பற்றிய செய்தி அறிந்து கொள்வதில் பைத்தியமாக இருக்கிறோம். ஒரு நாளைக்கு 4 வானிலை மாற்றங்கள் என ஓராண்டுக்கு 6000 வானிலை பதிவுகள் கணக்கிடப்படுகிறது.
நான் பெரும்பாலும் டிவி பேட்டிககளை தவிர்த்து வருகிறேன். சில சமயங்களில் அவர்களிடம் பேட்டி வேண்டாம் என்று சொல்வது கடினமாகிவிடுகிறது. அப்போது பேட்டி கொடுக்க வேண்டிய நிலை உருவாகிறது. பல்வேறு காரணங்களால் நான் சிலருடைய அழைப்பில் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் என்னிடம் கேட்ட வீடியோ உள்ளடக்கத்தை நான் கொடுக்காததற்கும் இது தான் காரணம். என்மீதான தனிப்பட்ட தாக்குதல்களை நிறுத்துங்கள். நான் யாரையும் குறை கூற மாட்டேன்.” என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் விளக்கம் அளித்துள்ளர்.
To all those who try to brand. If someone respects me and ask me the opinion on rains. I provide the same. This was the case right from 2015 till now for both the Governments. Sometimes it might be behind the scenes. I work in projects related to hydrology and hydraulics and i…
— Tamil Nadu Weatherman (@praddy06) October 15, 2024