“தமிழக வெற்றி கழகம்” அதிகாரப்பூர்வமாக கட்சியை தொடங்கிய நடிகர் விஜய்.!
நடிகர் விஜய் தொடங்கியுள்ள புதிய கட்சிக்கு “தமிழக வெற்றி கழகம்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நல்ல விஷயங்களை செய்து வரும் நிலையில், அவர் அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது என கூறப்பட்டு வந்த நிலையில், இன்று காலை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு விஜய் மக்கள் இயக்கத்தின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வருகை தந்தார்.
நடிகர் விஜய் தொடங்கவிருக்கும் கட்சியை பதிவு செய்வதற்காக அவர் வந்திருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், பதிவு முடிந்த பின்னர் கட்சியின் பெயர் மற்றும் மற்ற விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.அதன்படி, நடிகர் விஜய் தொடங்கியுள்ள புதிய கட்சிக்கு “தமிழக வெற்றி கழகம்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தற்போது, நடிகர் விஜய் அரசியலில் அதிகாரப்பூர்வமாக நுழைந்ததை தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தினர் மற்றும் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியில்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என்றும், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்க்காக வழிவகுப்பது தான் நமது இலக்கு என்று தமிழக வெற்றி கழகம் தலைவரும் நடிகருமான விஜய் சார்பாக அறிக்கை வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்கம் வெளியிடுள்ள அறிக்கையில், “விஜய் மக்கள் இயக்கம்” பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.
தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் “ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்” ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் “பிளவுவாத அரசியல் கலாச்சாரம்” மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன.
என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். “எண்ணித் துணிக கருமம்” என்பது வள்ளுவன் வாக்கு.
அதன்படியே, “தமிழக வெற்றி கழகம்” என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக 25.01.2024 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மற்றும் தலைமை செயலக நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டு கட்சியின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்டவிதிகள் (bylaws) முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின், வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும்.
இடைப்பட்ட காலத்தில், எமது கட்சியின் தொண்டர்களை அரசியல்மயப்படுத்தி, அமைப்பு ரீதியாக அவர்களை தயார் நிலைக்கு கொண்டுவரும் பணிகளும், கட்சியின் சட்டவிதிகளுக்குட்பட்டு ஜனநாயக முறையில் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து, உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
#தமிழகவெற்றிகழகம் #TVKVijay pic.twitter.com/ShwpbxNvuM
— TVK Vijay (@tvkvijayoffl) February 2, 2024