தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2023 வெளியீடு! சென்னையில் பிரமாண்ட தீம் பார்க்!
தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2023-ஐ முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், தமிழக சுற்றுலாத் துறையின் கொள்கை 2023 விளக்க குறிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அப்போது, சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டை சுற்றுலா துறையில் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் வகையில் சுற்றுலா கொள்கை 2023 உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா கொள்கை 2023 மூலம் சுற்றுலா திட்டங்களுக்கு தொழில் அந்தஸ்து வழங்குவது. சாகசம், பொழுதுபோக்கு உட்பட 12 சுற்றுலா பிரிவுகளுக்கு முன்னுரிமை அளித்து ஊக்கத்தொகை மானியங்கள் வழங்குவது. தனியார் முதலீட்டை ஊக்குவிக்க தகுதியான சுற்றுலா திட்டங்களை உருவாக்குவது.
ரூ.50 கோடி – ரூ.50 கோடிக்கு மேல், ரூ.200 கோடி – ரூ.200 கோடிக்கு மேல் என மூன்று வகையான முதலீட்டு திட்டங்கள் உள்ளன. இந்த மூன்று வகையான முதலீட்டு திட்டங்களுக்கு ஊக்கத்தொகை, மானியங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், முக்கிய சுற்றுலா தலங்களில் உள்ள விடுதிகள் மற்றும் நிறுவனங்களுக்கு மின்கட்டண சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தமிழக சுற்றுலாத் துறையின் கொள்கை விளக்க குறிப்பில், சென்னை புறநகரில் 100 ஏக்கரில் தீம் பார்க் அமைக்க தமிழ்நாடு சுற்றுலா துறை திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள டிஸ்னி, யூனிவேர்சல் ஸ்டூடியோ தீம் பார்க் போன்று சென்னையிலும் தனியார் பங்களிப்புடன் அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், விளையாட்டு அரங்குகள், நீர் விளையாட்டுகள், ராட்சத ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறும் வகையில் இந்த தீம் பார்க் அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.