தமிழக மாணவர்கள் உக்ரைன் செல்ல வேண்டாம் – தமிழக அரசு
தமிழக மாணவர்கள் உக்ரைன் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம் என தமிழக அரசு தகவல்.
உக்ரைன் போர் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், தமிழக மாணவர்கள் அந்நாட்டுக்கு செல்ல வேண்டாம் என வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. ரஷ்யா – உக்ரைன் போரால் தமிழகம் திரும்பிய மாணவர்கள் மீண்டும் அங்கு படிப்பை தொடர யாரும் உக்ரைன் செல்லவில்லை எனவும் கூறியுள்ளது. இதனிடையே, உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை விளக்கம் அளித்துள்ளது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் படையெடுக்க தொடங்கி, 7 மாதங்களைக் கடந்து போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரைன் படை தொடர்ந்து முன்னேறிய நிலையில், ரஷ்யா தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. அதன்படி, நேற்று தலைநகர் கீவில் 80க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை தொடர்ச்சியாக வீசி தாக்குதலை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. அதுபோல உக்ரைனும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், தமிழக மாணவர்கள் உக்ரைனுக்கு செல்ல வேண்டாம் எனவும் அங்கிருந்து திரும்பிய மாணவர்கள் யாரும் இதுவரை மீண்டும் உக்ரைன் செல்லவில்லை எனவும் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.