தமிழ்நாட்டை 3 மாநிலங்களாக பிரிக்க வேண்டும்… அர்ஜுன் சம்பத் பரபரப்பு பேச்சு!!
தமிழ்நாட்டை மூன்று மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
கோவை சங்கனூர் பகுதியில் நேற்று இந்து மக்கள் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த செயற்குழுக் கூட்டம் இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்றது.
செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத் ” கொங்கு பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. நமது தமிழகத்தை 3 மாநிலங்களாக பிரிக்க வேண்டும். தென் மாவட்டங்களை பிரித்து ஒரு மாநிலம், கொங்கு பகுதியை பிரித்து ஒரு மாநிலம் என உருவாக்கப்பட வேண்டும்.
இந்து மக்கள் கட்சி இது தொடர்பான முன்னெடுப்புகளை கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டபூர்வமான முயற்சிகள் அனைத்தும் மேற்கொள்வதற்கு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் மதம் மாறி சென்றவர்களும் இந்து பட்டியலின சமூக மக்களுக்கு உரிய சலுகைகளை அனுபவித்துக் கொள்ள முடியும் என்ற சட்டத்தை தமிழக முதல்வர் கொண்டு வந்துள்ளார். இது சட்டபூர்வமாக செல்லாது. இதற்கு அதிகாரம் மத்திய அரசிற்கு தான் உள்ளது.
இது அம்பேத்கர் கொள்கைகளுக்கு மட்டும் அல்லாமல் அம்பேத்கரின் சட்டங்களுக்கும் விரோதமானது. இதனை நிறைவேற்றினால் கிறிஸ்தவர்கள் அதனை பயன்படுத்தி கொள்வார்கள். எனவே, இந்து மக்கள் கட்சி இந்த மதம் மாறி சென்றவர்களுக்கும் சலுகைகளை அளிப்பதை எதிர்த்து சட்டப் போராட்டத்தை முன்னெடுக்கும். பிரதமரின் வேட்பாளர்கள் தான் தமிழகத்தில் 40 நாடாளுமன்ற தொகுதிகளும் வெற்றி பெற வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.