“அரசியலில் கூட்டணி..” தமிழக வெற்றிக் கழகத்திற்காக கதவை திருந்து வைத்து காத்திருக்கும் கட்சிகள்.!
சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சி உடன் கூட்டணி குறித்த கேள்விகளுக்கு பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு மற்றும் நட்புறவான பதில்களையே அளித்து வருகின்றனர்.
விஜயின் அரசியல் பயணம் ஆரம்பமாகும் முன்னரே அவர் கட்சி பற்றிய செய்திகள் தலைப்பு செய்திகளாக மக்கள் முன் கடந்து செல்கிறது. திரையில் உச்சநட்சித்திரமாக கோலோச்சி கொண்டிருக்கும் வேளையில் விஜயின் “தேர்தல் அரசியல்” முடிவு பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.
சென்னை பனையூரில் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர், கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் “தமிழக வெற்றிக் கழகம்” எனப் பதிவு செய்தார் த.வெ.க முக்கியத் தலைவர் புஸ்ஸி ஆனந்த். அதன்பிறகு பிப்ரவரி 3இல் அதிகாரபூர்வமாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் என்ற தலைப்பின் கீழ் அறிக்கை மூலம் விஜயின் “அரசியல் பயணம்” இனிதே ஆரம்பமானது.
த.வெ.க முதல் அறிக்கை :
தனது முதல் அறிக்கையிலேயே, ” நிர்வாக சீர்கேடுகள், ஊழல், சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்தும் அரசியல் கலாச்சாரம்” என மாநில அரசியல் முதல் தேசிய அரசியல் வரையில் பெயரை குறிப்பிடாமல் பாதுகாப்பான விமர்சனத்தை முன்வைத்தார் விஜய். மேலும், தனது கட்சியின் இலக்கு அறிந்து, 2024 மக்களவை தேர்தல் தவிர்த்து 2026 சட்டப்பேரவை தேர்தலில் தான் போட்டி எனவும், அதுதான் மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றம் எனவும் குறிப்பிட்டார் த.வெ.க தலைவர் விஜய்.
அதனை அடுத்து, த.வெ.க சார்பில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள், பண்டிகை தின வாழ்த்துக்கள் என சென்று கொண்டு இருக்க, இம்மாதம் (ஆகஸ்ட்) கட்சிக்கொடி அறிமுகம் செய்து, அடுத்த மாதம் த.வெ.க முதல் மாநாடு என அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளை ஆரம்பித்துள்ளார் அரசியல் கட்சித் தலைவர் விஜய்.
நட்புறவில் தலைவர்கள்…
இது ஒரு புறமிருக்க, இன்னும் அரசியல் களத்தில் வேரூன்றாத தமிழக வெற்றிக் கழகத்துடன் சற்று ஆதரவு மற்றும் நட்பு நிலைப்பாட்டையே பெரும்பாலான கட்சிகள் முன்னெடுத்து வருவது விஜயின் அரசியல் வருகை மீது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. விஜய் கட்சியில் இளைஞர்கள் பட்டாளம் ஏராளம். பெண்கள் ஆதரவு என விஜயின் வாக்கு வங்கி என்பது தற்போதே ஒரு நிலையான சதவீதத்தில் உள்ளது. அதனை தங்கள் கட்சி ஆதரவுக்காக பயன்படுத்தி கொள்ள அரசியல் கட்சி தலைவர்கள் திரைமறைவு வேலைகளை செய்து வருகின்றனர்.
த.வெ.க விஜயுடனான கூட்டணி என்ற கேள்வி அரசியல் தலைவர்கள் முன் செய்தியாளர்கள் கேட்கும்போதெல்லாம், எந்த அரசியல் தலைவர்களும் “விஜயுடன் கூட்டணி இல்லை” என திட்டவட்டமாக மறுத்ததே இல்லை. ” பேச்சுவார்த்தை நடக்கலாம்.'”, “பின்னர் முடிவுசெய்யப்படும்”, “தலைவர் முடிவு எடுப்பார் ” முதல் தற்போது “மாமன் மச்சான் கூட்டணி” வரையில் பதில்கள் வந்து கொண்டு இருக்கின்றன.
எம்.ஜி.ஆர் போல விஜய் :
விஜயின் அரசியல் பயணம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறுகையில், ” எம்.ஜி.ஆர் போல சம்பாதித்த பணத்தை மக்களுக்கு கொடுக்க நினைக்கிறார் விஜய். அவரை போன்ற இளைஞர் அரசியலுக்கு வருவதை நாங்கள் வரவேற்கிறோம். முழுநேர அரசியலுக்கு வந்த பின்னர்தான் அவருடைய கொள்கை செயல்பாடுகள் தெரிய வரும். விஜய் அதிமுக கூட்டணிக்கு வந்தால் நல்லது தான். ஆனால் தேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தைகள் எல்லாம் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார் என்று கூறினார்.
5 முனை போட்டி :
விஜயின் அரசியல் வருகையை குறிப்பிட்டு அண்மையில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ” உள்ளாட்சி தேர்தலில் கவனமாக இருக்க வேண்டும். தற்போது 4 நான்கு முனை (திமுக, அதிமுக, பாஜக , நாம் தமிழர்) போட்டி உள்ளது. இது 5 முனை போட்டியாக வர வாய்ப்புள்ளது. விரைவில் ஒருவர் (விஜய்) கொடி சின்னம் அறிவிக்க உள்ளார். அவர்கள் (த.வெ.க) தொண்டர்கள் சுயேட்சையாக கூட நிற்கலாம். இதனை மனதில் வைத்து தேர்தல் களத்தில் கவனமாக இருக்க வேண்டும். ” என அவர் கூறினார்.
சீமான் :
விஜயுடன் கூட்டணியா என்ற கேள்வி எப்போது கேட்டாலும், அதற்கு துளியும் மறுப்பு தெரிவிக்காமல் தம்பி விஜய் என அன்போடு கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வரவேற்பு தெரிவிப்பார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான். “விஜயுடன் பல பிரச்னைகளில் உடன் நின்றிருக்கின்றேன். என கூறியவர் , இதனை கூட்டணிக்கான அஸ்திவாரம் என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.” என கூறியவர்,
பின்னர், ” நான் அண்ணன் அவர் எனக்கு தம்பி அவர்தான் என்னிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினார். மேலும், தேர்தல் கூட்டணி குறித்து தம்பி விஜய் தான் முடிவு எடுக்க வேண்டும். இன்னும் தேர்தலுக்கு கால அவகாசம் இருக்கிறது என அப்போது பேசுவோம்.” என எத்தனை முறை பேட்டியளித்தாலும் விஜய் கூட்டணிக்கு ஆதரவு நிலைப்பாட்டிலேயே பதில் கூறி வருகிறார் சீமான்.
மாமன் மச்சான் :
விஜய் அரசியலுக்கு வரும் முன்பே, 2017 மெர்சல் பட ரிலீஸ் சமயத்தில் பாஜக VS ஜோசப் விஜய் என்ற ஓர் பனிப்போர் நிகழ்ந்து தணிந்தது. ஆனால் அந்த பனிப்போர் காலம் தற்போது மெல்ல மெல்ல மாறி மாமன் மச்சான் கூட்டணி என்ற நிலைக்கு விஜயின் அரசியல் கட்சி மீதான பாஜக பார்வை மாறியுள்ளது. “திமுக, அதிமுக அங்காளி பங்காளிகள் அவர்கள் உடன் கூட்டணி இல்லை. எங்கள் (பாஜக) கூட்டணி மாமன் – மச்சான் கூட்டணி தான். விஜய் உடன் கூட்டணி வைத்தால் அது மாமன் – மச்சான் கூட்டணி தான்” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகிறார்.
கனிமொழி அட்வைஸ் :
தற்போதுள்ள நிலையில், 2026 தேர்தலில் திமுக கட்சியானது அதிமுகவுக்கு அடுத்து அதிக கவனம் செலுத்தி பார்க்கும் இடத்தில் விஜயின் த.வெ.க உள்ளது. “அடுத்த முறையும் நாங்கள் தான் ஆட்சி” என்று மார்தட்டி கொள்ளும் திமுக கூட விஜய் கட்சியுடன் சுமூகமான உறவை தான் நாடுகிறது. விஜய் பற்றிய எதிர்ப்பு குரல்களோ, எதிர்ப்பு கருத்துக்களோ திமுக தரப்பில் வெளியாகவில்லை.
மாறாக அரசியலில் ஜொலிக்க திமுக எம்பி கனிமொழியை அட்வைஸ் கொடுத்தார் . அவர் கூறுகையில், “மிகப்பெரிய நட்சத்திரமாக ஜொலிக்க அதற்கான பாதையை அவர் தெளிவாக அமைத்து, முயற்சிகளை செய்ததால் தான் இந்த உயரத்தை அடைய முடிந்தது. அதே தெளிவான உழைப்போடு, தெளிவான பாதையோடு பயணித்தால் சினிமாவை போல் அரசியலிலும் விஜய் ஜொலிப்பார். ” என கூறினார்.
மற்ற கட்சிகள்…
இப்படி பிரதான கட்சிகள் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு ஆதவாக, ஓர் நட்புறவோடு கருத்துக்களை பகிர்ந்து வரும் வேளையில், மற்ற சிறிய கட்சிகள் விஜய் கட்சிக்கு செல்ல ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் முக்கிய அங்கமாக இருக்கும் விசிக ஒருவேளை அக்கூட்டணியை விட்டு பிரிந்தால் கண்டிப்பாக பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டார்கள். அதே நேரம் ஒருவேளை பாஜகவுடன் கூட்டணி அமைத்து விடுமோ என்ற நிலையில் இருக்கும் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவும் யோசிப்பார்கள். அப்படி இருக்கும் வேளையில் விஜய் கட்சியை தேர்வு செய்ய கூட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதற்கு திமுக எனும் பலமான கூட்டணியை விட்டு விசிக வெளியில் வர வேண்டும். அது நடந்தால் பிறகு பேசலாம்.
விஜயின் வாக்கு வங்கி :
கட்சிகளின் நிலைப்பாடு இப்படி இருக்க விஜய் தேர்தல் அரசியலில் களமிறங்கினால் அவரது வாக்கு சதவீதம் எப்படி இருக்கும் என்ற வியூகங்களை அரசியல் களத்தில் தற்போதே கணிக்கப்படுகின்றன. பல வருடங்களாக தனித்து போட்டியிடும் நாம் தமிழர் தற்போது தான் 8 சதவீதத்தை எட்டி பிடித்துள்ளார்கள். விஜய் பெரிய நட்சித்திரம் என கூறினாலும் , அதே அளவு பட்டாளத்தோடு களமிறங்கிய விஜயகாந்த் முதல் தேர்தலில் 5 சதவீத ஓட்டுகளையே பெற்றார். ஆனால் விஜயகாந்த் அப்போது எம்எல்ஏவாக மாறினார்.
அதே போல, தற்போதைய கணிப்புப்படி, தமிழகத்தில் எந்த தொகுதியில் நின்றாலும் விஜய் அத்தொகுதியில் வெற்றி பெற்று விடுவார். ஆனால், விஜய் கட்சியின் வேட்பாளர்களின் வெற்றி என்பது தமிழக வெற்றிக் கழக கொள்கை , கோட்பாடுகள் கள அரசியலை புரிந்து கொண்டு “களம் காண்பது” என பலகாரணிகள் கொண்டே முடிவு செய்யப்படும்.