தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பேற்பு!

Default Image

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக, காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பு.

தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின் நலன்களைப் பேணி காத்திட, உரிமைகளைப் பாதுகாக்க 1989-ம் ஆண்டு டிசம்பர் 13-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது. இதன் பிறகு 2010-ம் ஆண்டு மாநில சிறுபான்மையினர் ஆணையச் சட்டத்தின்படி சட்டப்பூர்வ அதிகாரம் பெற ஆணையமாகவும் செயல்பட்டு வருகிறது.

தமிழக மாநில சிறுபான்மையினர் ஆணையம், சிறுபான்மையினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தின் தலைவராக கடந்த சில தினங்களுக்கு முன்பு எஸ்.பீட்டர் அல்போன்ஸை நியமித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். திமுக அரசில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு சிறுபான்மையினர் நல ஆணைய பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாநில சிறுபான்மைய ஆணைய தலைவராக நியமிக்கப்பட்ட பீட்டர் அல்போன்ஸ் பொறுப்பேற்றுக்கொண்டார். சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேய பாவணர் நூலக வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் பொறுப்பேற்றார். ஆணை துணை தலைவராக நியமிக்கப்பட்ட டாக்டர் மஸ்தான் உள்பட உறுப்பினர்கள் 6 பேரும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

உறுப்பினர்கள் ஏ.பி.தமீம், அன்சாரி, ஹர்பஜன் சிங் சூரி, மன்ஞ்ஜித் சிங் நய்யர், பைரேலால் ஜெயின், டாக்டர் எஸ்.டான்பாஸ்க்கோ, டாக்டர் எம்.இருதயம் மற்றும் பிக்கு மௌரியார் புத்தா ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர். இதனிடையே, 1989, 1991 சட்டசபை தேர்தல்களில் தென்காசி தொகுதியில் இருந்தும் 2006-ம் ஆண்டு கடையநல்லூர் தொகுதியில் இருந்தும் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பீட்டர் அல்போன்ஸ். இவர் ராஜ்யசபா எம்.பி.யாகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.

சிறுபான்மையினர் மீது முதலமைச்சர் பேரன்பு கொண்டுள்ளார்; சிறுபான்மையினர் ஆணையத்துக்கு புத்துயிர் ஊட்டியுள்ளார் என்றும் சிறுபான்மையினர் உரிமை மற்றும் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்