தமிழ்நாடு சட்டப்பேரவை.. உரையை புறக்கணித்தார் ஆளுநர்!
நடப்பாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவைக்கு வருகை தந்த ஆளுநருக்கு சபாநாயகர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார். இதன்பின், அனைவருக்கும் வணக்கும் என்று தமிழில் கூறி தனது உரையை ஆளுநர் தொடங்கினார்.
தமிழ்நாட்டு மக்களுக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். பின்னர் தேசிய கீதம் முதலிலும், இறுதியிலும் இசைக்கப்பட வேண்டும் என ஆளுநர் வேண்டுகோள் விடுத்து, தனது உரையை புறக்கணித்தார். தமிழக சட்டப்பேரவையில் தேசிய கீதம் இசைக்கப்படாத காரணத்தினால் உரையாற்ற ஆளுநர் மறுப்பு தெரிவித்து, அரசு தயார் செய்த உரையை ஆளுநர் படிக்காமல் புறக்கணித்தார்.
இன்று விசிக, கொ.ம.தே.க உடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..!
அரசின் உரையை முழுமையாக படிக்காமல் 2 நிமிடத்தில் முடித்துவிட்டு, வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த், ஜெய் பாரத் என குறிப்பிட்டு அவையில் தனது இருக்கையில் அமர்ந்தார். கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவையில் உரையின்போது சில சொற்களை ஆளுநர் தவிர்த்து சர்ச்சையாகியிருந்தது. திராவிட மாடல், அண்ணா, கலைஞர், பெரியார் போன்ற வார்த்தைகளை கடந்தாண்டு ஆளுநர் படிக்கவில்லை.
கடந்தாண்டு ஆளுநரின் சர்ச்சைக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. இந்த நிலையில், இந்தாண்டும் அரசு தயார் செய்த உரையை ஆளுநர் முழுமையாக படிக்காமல் புறக்கணித்து இருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஆளுநர் உரையை முழுமையாக படிக்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.