முதல்வர் பதிலுரை…தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று பதிலுரை அளிக்கவுள்ள நிலையில்,தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு.
நடப்பு ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று முன்தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்றது.இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு,தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2 நாட்களுக்கு மட்டுமே நடைபெறும் என்றும், சட்டப்பேரவையில் கேள்வி நேரம்,முதலமைச்சர் பதிலுரை நேரலை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இரண்டாம் நாளான நேற்று,மறைந்த முன்னாள் ஆளுநர் ரோசய்யா,முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 11 இராணுவ வீரர்கள்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் துரைமாணிக்கம்,புனீத் ராஜ்குமார் ஆகியோர்களின் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக கேள்வி நேரம் நேற்று நேரலை செய்யப்பட்டது.இந்த கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு துறை நீதியாக அமைச்சர்கள் பதில் அளித்தனர். மேலும்,ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது சட்டமன்ற உறுப்பினர்களின் விவாதம் நடைபெற்றது.
இதற்கிடையில்,மாநில நிதியில் கட்டப்படும் மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான உரிமையை நீட் தேர்வு பறித்துவிட்டது. நீட் விலக்கு மசோதா ஆளுநரால் இன்னும் குடியரசு தலைவருக்கு அனுப்பப்படவில்லை என்றும் தெரிவித்தார். தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்க மறுத்து வருகிறார் என்றும்,
நீட் தேர்வு விலக்கு மசோதா பற்றி கடிதம் அளிக்க மத்திய உள்துறை அமைச்சர் நேரம் கொடுக்கவில்லை.இது மக்களாட்சி மாண்புக்கு எதிரானது. நீட் தேர்வுக்கு எதிரான சமூக நீதிக்கான போராட்டம் தொடரும். போராட்டங்கள் மூலமே வளர்ச்சி பெற்றுள்ளோம்.நீட் தேர்வு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள ஜனவரி 8 ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்தார்.
மேலும்,ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முடுப்பில்லி மற்றும் பல்கலைக்கழக துணை வேந்தர்களை ஆளுநர் நேரடியாக நியமித்து வரும் நிலையில்,தமிழக அரசே துணை வேந்தர்களை நியமிக்கும் வகையில்,மார்ச் மாதம் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மசோதா நிறைவேற்றப்படும் என்றும் முதல்வர் கூறினார்.
இந்நிலையில்,தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது.ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று பதிலுரை அளிக்கவுள்ளார்.இன்றும் சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை செய்யப்படவுள்ளது.