இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை ! ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார்!
நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் இன்று தொடங்குகிறது.
சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். கடந்த ஜனவரி 3ஆம் தேதி சபாநாயகர் மு. அப்பாவுவும், சட்டப்பேரவை செயலர் கி. சீனிவாசனும் ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்தித்து முறைப்படி சட்டப்பேரவையில் உரையாற்ற வருமாறு அழைப்பு விடுத்தனர்.
இதனையடுத்து, வருகை தரவுள்ள ஆளுநர் ரவி தனது உரையை முதலில் ஆங்கிலத்தில் படிப்பார். அதை தொடர்ந்து அதன் தமிழ் மொழியாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார். இன்றைய அமர்வில், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்புகள் மற்றும் எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
முதலில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பின்னர் அவை ஒத்திவைக்கப்படும்.இதனால் சட்டப்பேரவை விவாதங்கள் புதன்கிழமையிலிருந்து மீண்டும் தொடங்கபடலாம் எனவும் கூறப்படுகிறது. புதன், வியாழன், வெள்ளி என 3 நாட்கள் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே சமயம், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் முக்கியமாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம், கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது, மேலும் எதிர்க்கட்சிகள் அரசு துறையின் செயல்திறனை சுட்டிக்காட்டும் வாய்ப்புள்ளது. வேங்கைவயல் விவகாரம் பற்றியும் கவனம் செலுத்தப்பட உள்ளது. விசிக எம்.எல்.ஏ. எஸ்.எஸ். பாலாஜி இது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.