இந்தியாவின் கஞ்சா தலைநகரம் தமிழகம் – திமுகவின் சாதனை இதுதான் :அண்ணாமலை
இந்தியாவின் கஞ்சா தலைநகரமாக தமிழகம் மாறியுள்ளதாக அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், தமிழகத்தில் நாளுக்கு நாள் போதையால் ஏற்படும் சமூக சீரழிவுகளை செய்திகளின் வாயிலாக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். முன்பு எப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் போதை பொருட்களின் புழக்கம் உச்சத்தில் இருக்கிறது என்பது ஆபரேஷன் கஞ்சா 1.0, 2.0, 3.0 என்று நமது காவல்துறையினரின் கண்துடைப்பு நடவடிக்கைகளால் காணமுடிகிறது.
தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சர் திரு பொன்முடி அவர்கள், நடைபெற்று வரும் இந்த திறனற்ற திமுக அரசின் இயலாமையை மீண்டும் ஒரு முறை வெட்ட வெளிச்சமாக்கிவிட்டார். மது ஆலை நடத்தி வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு TR ஜெகத்ரட்சகன் அவர்களையும் உடன் பாலு மற்றும் திரு அமர்த்திக்கொண்டு
பத்திரிகையாளர்களை அமைச்சர் திரு பொன்முடி அவர்கள் சந்தித்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று விஜயவாடா துறைமுகத்திலிருந்து தமிழகத்திற்கு போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுகிறது என்பதை யாரோ எழுதிக் கொடுத்த துண்டு சீட்டிலிருந்து அமைச்சர் படித்தார்.
இதில் கொடுமை என்னவென்றால் விஜயவாடாவில் துறைமுகம் மட்டுமல்ல கடலே இல்லை என்பதே உண்மை. இப்படி வாட்ஸப்பில் வந்த வந்ததிகளை பத்திரிகையாளர்களிடம் சொன்ன அமைச்சருக்கு ஒரே ஒரு கேள்வி
2021ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்பு தமிழகம் ஏன் தலைகீழாக மாறியுள்ளது? துறைமுகங்கள் தனியார் மயமாக்கப்பட்டதினால் தான் போதை பொருட்கள் இந்தியாவில் நுழைகிறது என்பன போன்ற விசித்திரமான சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் அமைச்சர் பொன்முடி அவர்கள். 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 கிலோ ஹெராயின் தூத்துக்குடியில் பிடிபட்ட செய்தியை அமைச்சர் மறந்துவிட்டாரா. திமுகவினர் சமூக வலைத்தளங்களில் பரப்பும் பொய்களை எல்லாம் தொகுத்து அமைச்சர் வாசித்ததை போல் இருந்தது அவரின் செய்தியாளர் சந்திப்பு. நமது அரசியலமைப்பு சட்டத்தின்படி காவல் துறை மாநில பட்டியலில் உள்ளது. 12 மணிக்கு முன்னால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட கூடாது என்று சட்டம் இருந்தும் அதை கூட சரிவர கண்காணிக்காமல் உறங்கிக் கொண்டிருக்கிறது திமுக அரசு.
நீங்கள் எப்படி போதை பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்துவீர்கள்? திமுக ஆட்சிக்கு வந்த பின் கைது அதிகமாகிவிட்டது என்று பெருமை பட்டுக் கொள்ளும் அமைச்சர்.திமுக ஆட்சிக்கு வந்த பின் தான் தமிழகத்தில் எட்டுத்திக்கும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது என்பதை உணர வேண்டும். ஊடங்களை திருப்தி படுத்த நீங்கள் காட்டும் கவனத்தை உங்களுக்கு மக்கள் கொடுத்துள்ள பொறுப்பிலும் காட்டுங்கள்.
தூத்துக்குடியிலிருந்து பல இடத்திற்கு போதை பொருட்கள் கடத்தப்படுகிறது என்று வேறு மாநிலத்தவர் குற்றம் சாட்டினால் அது தமிழகத்திற்கு எவ்வளவு பெரிய தலைகுனிவு? கடத்தி செல்லும் நபர்களை மட்டும் கைது செய்து வரும் முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை, எங்கிருந்து இந்த கஞ்சா வருகிறது, அதை எப்படி முடக்குவது என்பதை ஆலோசிக்காமல் தமிழகத்தை கஞ்சாவின் தலைநகரமாக மாற்றியது தான் திமுக அரசின் சாதனை.
மது விற்று தனி நபர் ஒருவரிடம் ஆண்டுக்கு 5000 ரூபாய் வரை கொள்ளையடிக்கும் திமுக அரசு இந்தியாவில் முதல் இடம் என்ற பெருமையை பெற்றுள்ளது. டாஸ்மாக் மூலமாக மது விற்று ஒவ்வொரு தமிழனிடமும் சராசரியாக சென்ற ஆண்டு மட்டும் 5000 ரூபாய் வசூல் செய்த அரசு போதையை ஒழிக்கும் என்று எப்படி நம்புவது?
தங்களின் திறனற்ற தன்மையை மறைக்க மத்திய அரசின் மேல் பழி போடுவதை திமுக நிறுத்தி கொள்ள வேண்டும். முதலில் திமுக அமைச்சர்கள் தாங்கள் நடத்தும் மது ஆலைகளை மூடி விட்ட பிறகு மற்றவர்களுக்கு அறிவுரை கூறுங்கள். கண்துடைப்பு நடவடிக்கைகளால் மக்களை ஏமாற்றாமல் இனியாவது ஆக்கபூர்வமாக ஏதாவது செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.’ என தெரிவித்துள்ளார்.