விரைவில் புயல்… தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை.!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது கடந்த அக்டோபர் மாதம் முதல் பெய்து வருகிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை தற்போது வரையில் தமிழகத்தில் பெய்து வந்த நிலையில், தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, மேலும், தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஒட்டிய கிழக்கு அந்தமான் பகுதிகளில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
தொடர்மழையால் நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரி..! மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, புதிய புயலாக மாறும். இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி , காரைக்கால் பகுதியில் பல்வேறு இடங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
இந்த புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் அடுத்து ஐந்து நாட்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் அடுத்த இரண்டு தினங்கள் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும்,
டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழையும், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யும்.
இன்று அந்தமான் பகுதியில் 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதாலும், 1,2 தேதிகளில் 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் கடலில் காற்று வீசக்கூடும் என்பதாலும் மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றவர் திரும்பி வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையோடு , இந்த ஆண்டு பருவமழையை ஒப்பிடுகையில் 8 சதவீதம் குறைவாகவே மழை பொழிவு இருந்துள்ளது. கடந்த வருடம் 35 சென்டிமீட்டர் பெய்து இருந்த மழையானது, இந்த வருடம் 32 செண்டிமீட்டராக மாறி உள்ளது என்றும் தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.