உலக அரங்கிலும் தனி இடத்தை பிடித்த தமிழ்நாடு..! பிரக்ஞானந்தாவுக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து..!
உலக கோப்பை செஸ் தொடரில் இரண்டாம் இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு, சென்னை விமான நிலையத்தில், தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பின் திறந்த வெளி வாகனம் மூலம் மேள தாளம் முழங்க, பிரக்ஞானந்தாவை ஊர்வலமாக கூட்டிச் சென்று, நேரு விளையாட்டு அரங்கில் பிரக்ஞானந்தாவுக்கு தேநீர் விருந்து வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, பிரக்ஞானந்தா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து, உலக செஸ் தொடரில் தான் வென்ற பதக்கத்தை, அவரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரக்ஞானந்தாவின் பெற்றோர்கள் மற்றும் அவரது முதல் பயிற்சியாளர் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த சந்திப்பின் போது பிரக்ஞானந்தாவுக்கு தமிழக அரசு சார்பில் 30 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்நிலையில், இந்திய ஒன்றியத்தில் செஸ் விளையாட்டின் முகமாகத் திகழும் தமிழ்நாடு, உலக அரங்கிலும் தனி இடத்தை பிடிக்க காரணமான தம்பி பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள். என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், “தமிழ்நாட்டின் எளிய குடும்பத்தில் பிறந்து, தன்னுடைய அயராத உழைப்பாலும் – தாயார் ஊட்டிய தன்னம்பிக்கையாலும் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்ற செஸ் உலகக்கோப்பையில் 2-ஆம் இடத்தை பிடித்துள்ள செஸ் கிராண்ட் மாஸ்டர் தம்பி பிரக்ஞானந்தாவுக்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கழக அரசு சார்பில் உயரிய ஊக்கத் தொகையாக ரூ.30 லட்சத்தை வழங்கிய நிகழ்வில் இன்று பங்கேற்றோம்.”
“செஸ் விளையாட்டில் இளம் வயதிலேயே பிரக்ஞானந்தா எட்டியுள்ள உயரங்கள், இன்னும் பல பிரக்ஞானந்தாக்களை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்திய ஒன்றியத்தில் செஸ் விளையாட்டின் முகமாகத் திகழும் தமிழ்நாடு, உலக அரங்கிலும் தனி இடத்தை பிடிக்க காரணமான தம்பி பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள்.” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.