டெல்லி புறப்பட்டார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!
தமிழக அரசு மற்றும் ஆளுநர் இடையே கருத்து மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல் நடத்தியிருந்தார். அப்போது பேசிய ஆளுநர், நீட் விலக்கு மசோதாவுக்கு கையெழுத்து போடமாட்டேன், நீட் விலக்கு மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கூறியிருந்தார். ஆளுநரின் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இதையடுத்து சென்னை குரோம்பேட்டையில் இரண்டு முறை முயற்சி செய்தும் நீட் தேர்வு தோல்வியால் மாணவன் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்துகொண்டார். இவரை தொடர்ந்து தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர் மற்றும் அவரது தந்தைக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர், நீட் எதிரான மசோதாவுக்கு கையெழுத்திட மாட்டேன் என ஆளுநர் பேசியதற்கு கண்டனம் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து திமுகவின் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில், தமிழ்நாடு முழுவதும் வரும் 20-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரத அறப்போர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக திமுக உண்ணவிரோத போராட்டம் அறிவித்துள்ள நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அதன்படி, இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, வரும் 20ம் தேதி மாலை சென்னை திரும்புகிறார் என கூறப்படுகிறது.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களை ஆளுநர் சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. திமுக உண்ணாவிரதப் போராட்டம் 20ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஆளுநர் திடீர் டெல்லி சென்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும், தமிழக அரசு மற்றும் ஆளுநர் இடையே கருத்து மோதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.