தமிழக ஆளுநரை திரும்பப் பெறும் விவகாரம் – மக்களவையில் திமுக நோட்டீஸ்!
தமிழக ஆளுநரை பதவியில் இருந்து நீக்க கோரி திமுக ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் அளித்துள்ளது.
தமிழக ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்தை மீறி வருவதாகவும், பொது நிகழ்ச்சிகளில் சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும் திமுக தொடர்ந்து குற்றச்சாட்டி வருகிறது. அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதால், அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் அல்லது திரும்ப பெற வேண்டும் எனவும் குரல் எழுப்பி வருகிறது.
இதனால், ஆளுநருக்கு, அரசுக்கு தொடர் மோதல் போக்கு நிலவி வருகிறது. மேலும் ஆளுநர் செயல்பாடுகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டங்களை தெரிவித்து, அவரை திரும்ப பெற வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக ஆளுநர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க கோரி திமுக எம்பி டிஆர் பாலு நோட்டீஸ் அளித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக தமிழக ஆளுநர் செயல்படுவதாகவும், மக்களவையின் வழக்கமான அலுவலை ஒத்தி வைத்துவிட்டு விவாதம் நடத்த வேண்டும் எனவும் திமுக அளித்துள்ள நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.