தமிழக அரசின் பரிந்துரை – ஒரு மாதமாக ஆளுநர் நிறுத்திவைப்பு!
டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு பெயர் உள்பட 10 உறுப்பினர் பதவிகளுக்கும் தமிழக அரசு பரிந்துரை பட்டியலை ஆளுநருக்கு அனுப்பியது. தமிழக அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காமல் ஒரு மாதமாக ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளார் என கூறப்படுகிறது. ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு பதில் அளித்த பிறகும் ஒப்புதல் அளிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
பணி நியமனங்களை விரைந்து மேற்கொள்ள டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிடங்களை நிரப்ப வேண்டியது அவசியமாகும். தமிழ்நாட்டின் அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நியமினம் செய்து வருகிறது. அதன்படி, ஆண்டுதோறும் குரூப் தேர்வுகள் நடத்தப்பட்டு, ஆட்களை தேர்வு செய்வது டிஎன்பிஎஸ்சியின் முக்கியப் பணியாகும்.
டிஎன்பிஎஸ்சியில் 1 தலைவர் மற்றும் 13 உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அமைப்பு. இதில் தற்போது தலைவர் பணியிடம் காலியாக நிரப்பப்படாமல் உள்ளது. டிஎன்பிஎஸ்சியில் தற்போது 2 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். உறுப்பினர்களில் ஒருவரான முனியநாதன் பொறுப்பு தலைவராகப் பணியாற்றி வருகிறார்.
டிஎன்பிஎஸ்சிக்கு நிரந்தரமாக தலைவர் யாரும் இதுவரை நியமிக்கப்படவில்லை. இதனால் தேர்வுகள், தேர்வு முடிவுகள் வெளியீடு உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த சமயத்தில், டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு பெயர் உள்பட 10 உறுப்பினர் பதவிகளுக்கும் தமிழக அரசு பரிந்துரை செய்து ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இருப்பினும், அரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் ஒரு மாதமாக கிடப்பில் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.