தமிழக அரசு இதை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓபிஎஸ்
தமிழகத்தில் பரவி வரும் ப்ளூ காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஓபிஎஸ் அறிக்கை.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்தவும், ஆங்காங்கே பரவி வரும் டெங்கு காய்ச்சல், ப்ளூ காய்ச்சல், பன்றி காய்ச்சல் ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டு வரவும் தமிழக அரசு தேவையான நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், தமிழ்நாட்டில் குழந்தைகளிடையே வேகமாக பரவி வரும் ‘ப்ளூ’ காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில், புதுச்சேரி மாநிலத்தை பின்பற்றி தொடக்கப் பள்ளிகளுக்கு சிறிது காலம் விடுமுறை அளிக்குமாறு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தி.மு.க அரசை வலியுறுத்தி நான் அறிக்கை வெளியிட்டு இருந்தேன்.
ஆனால், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்களோ பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கத் தேவையில்லை என்றும், அனைத்தும் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றும் தெரிவித்து இருந்தார். இருப்பினும், கள நிலைமை வேறுவிதமாகத்தான் இருக்கிறது. ‘ப்ளூ’ காய்ச்சலைத் தொடர்ந்து டெங்கு காய்ச்சலும் செப்டம்பர் மாதத்தில் இரு மடங்காக அதிகரித்து பொது மக்களை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது என்றும் தகவல்கள் வருகிறது.
எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி, அதிகரித்து வரும் கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வகையிலும், ஆங்காங்கே பரவி வரும் டெங்கு காய்ச்சல், ப்ளூ காய்ச்சல், பன்றி காய்ச்சல் ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டு வரும் வண்ணமும், யதார்த்தமான கள நிலவரத்திற்கேற்ப தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்தவும், ஆங்காங்கே பரவி வரும் டெங்கு காய்ச்சல், ப்ளூ காய்ச்சல், பன்றி காய்ச்சல் ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டு வரவும் தேவையான நடவடிக்கையினை எடுத்திடுக! pic.twitter.com/kcpUKQFFMV
— O Panneerselvam (@OfficeOfOPS) September 24, 2022