காய்கறி விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்..! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..!
காய்கறி விலையை குறைக்க நடவடிக்கை தேவை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தக்காளி விலை இன்று 100 ரூபாயை எட்டியுள்ளது. அதன்படி, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் வரத்து குறைவாக இருப்பதால் தக்காளி விலை ஒரு கிலோவிற்கு 100 ரூபாய் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலைகள் ஒரே சீராக இருப்பதையும், உழவர்களுக்கு நியாயமான விலை கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தையும், விளைபொருள் கொள்முதல் வாரியத்தையும் தமிழ்நாடு அரசு உடனடியாக அமைக்க வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தக்காளி விலை கிலோ ரூ.120 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. பெரும்பான்மையான காய்கறிகளின் விலைகள் கிலோ ரூ.80 முதல் 120 என்ற அளவுக்கு உயர்ந்திருக்கின்றன. வரத்துக் குறைவால் சாம்பார் வெங்காயத்தின் விலையும் அதிகரித்து கிலோ 100 ரூபாயை எட்டியுள்ளது.
அதனால், ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சென்னையில் கூட்டுறவுத்துறை மூலம் இயக்கப்படும் பண்ணைப் பசுமைக் கடைகளில் தக்காளி கிலோ ரூ.64 மற்றும் ரூ.68 என்ற விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
ஆனால், பண்ணைப் பசுமைக் கடைகள் சென்னையில் மிகக்குறைந்த அளவிலேயே இருப்பதாலும், அக்கடைகளில் வழக்கமாக விற்கப்படுவதைப் போன்று மிகக்குறைந்த அளவிலேயே தக்காளி போன்ற காய்கறிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதாலும் அது சந்தையில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
மேலும் வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலைகள் ஒரே சீராக இருப்பதையும், உழவர்களுக்கு நியாயமான விலை கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தையும், விளைபொருள் கொள்முதல் வாரியத்தையும் தமிழ்நாடு அரசு உடனடியாக அமைக்க வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.