பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள்! ஊக்கத்தொகை வழங்கிய தமிழக அரசு!
பாராலிம்பிக்கில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.5 கோடி ஊக்கத்தொகையை தமிழக அரசு வழங்கி இருக்கிறது.
சென்னை : இந்த ஆண்டில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் தொடரில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கியிருக்கிறார். பாராலிம்பிக்கில் தொடரில் கலந்து கொண்டு வெள்ளி மட்டும் வெண்கல பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு, துளசிமதி, மணிஷா, நித்யஸ்ரீ உள்ளிட்டோருக்கு ரூ.5 கோடி ஊக்கத்தொகை வழங்கினார்.
இதுவரை இல்லாத அளவிற்கு பாராலிம்பிக் தொடரில் இந்த ஆண்டு இந்திய அணி 29 பதக்கங்களைக் கைப்பற்றி சாதனைப் படைத்திருந்தது. அதில், 7 தங்கப்பதக்கமும், 9 வெள்ளிப்பதக்கமும் மற்றும் 13 வெண்கலப்பதக்கமும் அடங்கும். அதிலும், தமிழக வீரர்கள் 2 வெள்ளி , 2 வெண்கலம் பதக்கம் வென்று பெருமை சேர்த்தார்கள்.
தற்போது, 4 பதக்கங்களை வென்ற நம் தமிழக வீராங்கனைகளுக்கு தமிழக முதல்வர் ஊக்கத்தொகை வழங்கி இருக்கிறார். மேலும், நேற்றும் இதே போல செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.90 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.