தமிழக அரசுக்கு பொதுநலன் இல்லை – டாஸ்மார்க் திறப்பை வைத்து சாடிய உயர்நீதிமன்ற மதுரை கிளை!
டாஸ்மாக் திறப்பதில் அரசுக்கு பொதுநலன் எதுவும் இல்லை என உயர்நீதிமன்ற கிளை விமர்சனம் செய்துள்ளது.
கொரானா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக மதுக்கடைகளும் மூடப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் அண்மையில் மதுக் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டு சாராயமும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டம் ஜக்கம்பட்டி அன்னை சத்யா நகர் பகுதியில் பசுமை வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டி முன்னாள் ராணுவ வீரர் கோபால் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன் ராஜமாணிக்கம் அமர்வில், மதுபான கடைகளை திறப்பதில் அரசுக்கு பொதுநலன் இல்லை என கடுமையாக சாடியுள்ளது. மேலும் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதை தவிர்க்க கடைக்கு வெளியே விலைப்பட்டியல் வைக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளது. மேலும் டாஸ்மாக் கடையை சுற்றிலும் காணப்படும் குப்பைகள் மதுபாட்டில்கள் ஆகியவை சுகாதாரமற்ற சூழ்நிலை உருவாக்குவதாகவும் இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். அதுபோல முன்னாள் ராணுவ வீரர் கொடுத்துள்ள வழக்கின் பேரில் சத்யா நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை இயங்கி இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.