தமிழ்நாடு நாள்: தமிழர்கள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ்
தமிழ்நாட்டின் இழந்த உரிமைகளை மீட்டெடுத்து, முதன்மை மாநிலமாக உயர்த்த, தமிழ்நாடு நாளில், தமிழர்கள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவரது பதிவில், மொழிவாரி மாநிலங்கள் தத்துவத்தின் அடிப்படையில் சென்னை மாகாணம் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் ஒன்றாம் தேதி தான் உண்மையான தமிழ்நாடுநாள்.
இந்த நாளில் தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் எனது தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது அதை நாம் சகோதர உணர்வுடன் ஏற்றுக் கொண்டோம். நமது நிலப்பரப்பை சகோதர மாநிலங்களுக்கு விட்டுக் கொடுத்தோம். நம்மிடமிருந்து நிலத்தை பெற்றுக் கொண்ட திராவிட மாநிலங்கள் எதுவுமே நமக்கு நீரைக் கூட தர மறுக்கின்றன.
திருத்தணியும் தென்குமரியும் தமிழ்நாட்டில் எளிதில் இணைந்துவிடவில்லை.! முதல்வர் நெகிழ்ச்சி பதிவு.!
அதனால் தான் கூறுகிறேன்… மொழிவாரி மாநிலங்களால் நாம் அடைந்ததை விட இழந்தது அதிகம். நாம் இழந்த உரிமைகள் உள்ளிட்ட அனைத்தையும் மீட்டெடுக்க இந்த நாளில் உறுதியேற்போம். தமிழ்நாட்டின் இன்றைய நிலப்பரப்பு தமிழர்களின் மாநிலமாக 01.11.1956 அன்று நடைமுறைக்கு வந்த நிலையில், இந்த நாளையே தமிழ்நாடு நாளாக கொண்டாட தமிழக அரசு முன்வர வேண்டும்.
தமிழ்நாடு என்றால் தமிழ் என்ற அடையாளத்தை தமிழகம் இழந்து வருவதையும், மதுவுக்கு அடிமையாகி குடிகார மாநிலம் என்று தூற்றப்படுவதையும் தடுத்து நிறுத்தி, தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயர்த்தவும் இந்த நாளில் நாம் உறுதி ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.