தமிழகத்தின் கையிருப்பில் தற்பொழுது 5 லட்சம் தடுப்பூசிகள் உள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தற்போது தமிழகத்தின் கையிருப்பில் 5 லட்சம் தடுப்பூசிகள் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நேற்று சென்னை பெருங்குடியில் உள்ள நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் தொழு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தொடங்கி வைத்தார். அதன்பின், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு பருப்பு, அரிசி, காய்கறி உள்ளிட்ட சில அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசி அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தமிழகத்தில் தொழு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 11 ஆயிரத்து 490 பேர் பயன் பெரும் வகையில் சிறப்பு தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் இந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி உள்ளது எனவும் கூறியுள்ளார்.
இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக கண்டறியப்பட்டு அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஏதுவாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை தமிழகத்திற்கு 1,02,68,220 தடுப்பூசிகள் தமிழகம் வந்துள்ளதாகவும் அதில் 1,01,82,400 தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும் தற்போது தமிழகத்தின் கையிருப்பில் 5 லட்சம் தடுப்பூசிகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் மத்திய அரசு தமிழகத்திற்கு ஜூன் மாத 42 லட்சம் தடுப்பூசியை தருவதாக கூறியிருந்த நிலையில் இதுவரை 24 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளதாகவும் இன்னும் இந்த மாத இறுதிக்குள் 18 லட்சம் தடுப்பூசிகள் மத்திய அரசு சார்பில் தமிழகத்திற்கு அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மாதத்திற்கு இரண்டு கோடி தடுப்பூசி கொடுத்தாலும் கூட தமிழக அரசு அதனை செலுத்துவதற்கு தமிழக சுகாதாரத்துறை தயாராக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.