நாங்குநேரி தொகுதியில் தனித்துப்போட்டியிடுவது குறித்து முடிவு செய்யவில்லை-தமிழ்நாடு காங்கிரஸ்

நாங்குநேரி தொகுதியில் தனித்துப்போட்டியிடுவது குறித்து முடிவு செய்யவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாங்குநேரியில் நேற்று செயல்வீரர்கள் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு பேசினார்.அவர் பேசுகையில்,தென் மாநிலம் காங்கிரஸ் கட்சியின் உயிர்நாடி. தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா என்பதை பற்றி விவாதம் நடத்தவே இந்த கூட்டம் . 50 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருப்பது ஏன்? நம்மால் தனித்து நின்று வெற்றி பெற முடியாதா? என்று தொண்டர்கள் மத்தியில் கேள்வி எழுப்பினார்.மேலும் நாங்குநேரி தொகுதியில் தனித்துப் போட்டியிடுவது குறித்து தீர்மானம் நிறைவேறியதாக தகவல் வெளியானது.
ஏற்கனவே அழகிரி பேசியது திமுக -காங்கிரஸ் கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று வெளியான செய்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சிவகுமாருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில்,நாங்குநேரியில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை.
நாங்குநேரி தொகுதியில் தனித்துப்போட்டியிடுவது குறித்து எந்தத் தீர்மானமும் முன்மொழியப்படவோ, வழிமொழியப்படவோ, நிறைவேற்றப்படவோ இல்லை .நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் சிவக்குமார் தன்னிச்சையாக சில தீர்மான நகல்களை கூட்டத்திற்கு முன்பாக வெளியிட்டுள்ளார்.ஒழுங்கு நடவடிக்கை குழு முன் கடிதம் கண்ட 7 நாட்களுக்குள் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.