தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு பெண் தலைவரா? சோனியா காந்தி தலைமையிலான கூட்டத்தில் கோரிக்கை!
தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு பெண் ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மகளிர் அணி சார்பில் இன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் ‘மகளிர் உரிமை மாநாடு’ நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்க காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சென்னை வந்தனர். இதில், குறிப்பாக மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்பதன் மூலம் 5 ஆண்டுகளுக்கு பின் தமிழ்நாடு வந்துள்ளார் சோனியா காந்தி. சென்னை வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின், கனிமொழி எம்பி, கேஎஸ் அழகிரி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதனைத்தொடர்ந்து, சென்னை கிண்டியில் காங். முன்னாள் தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வபெருந்தகை மற்றும் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல், தமிழக நிலவரம், சாதிவாரி கணக்கெடுப்பு, மகளிர் இடஒதுக்கீடு மற்றும் நாடாளுமன்ற கூட்டணி உள்ளிட்ட விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியாக கூறப்படுகிறது. மேலும், ஒரே குடும்பத்தைச் சார்ந்த நபர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது. தமிழகத்தில் காலியாக உள்ள கட்சி சார்ந்த நிர்வாகிகளின் இடங்களை நிரப்ப வேண்டும். தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு பெண் ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படுகிறது.