ரூ.3440 கோடி முதலீடுகள் முதல் பிரதமர் மோடி, நடிகர் விஜய் வரையில்…. முதல்வரின் கருத்துக்கள்..!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு 8 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். உடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழிற்த்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய நபர்கள் சென்றனர்.
8 நாள் பயணத்தில் ஸ்பெயின் தலைநகர் மேட்ரிக்ஸில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் வரலாற்றுப் பெருமையும், தற்போது தமிழகத்தில் நிலவும் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலையும், தமிழக தொழில்துறை ஏற்படுத்தி தரும் என பன்னாட்டு தொழில் நிறுவனங்களிடம் எடுத்துரைத்தார்.
ஸ்பெயினில் இருந்து இன்று சென்னை திரும்புகிறார் முதலமைச்சர்..!
இந்த ஸ்பெயின் பயணத்தை நிறைவு செய்து இன்று சென்னை திரும்பினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை திரும்பிய முதல்வருக்கு மூத்த அமைச்சர்கள், தொண்டர்கள் என பலர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதன் பின்னர், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஸ்பெயின் பயணத்தின் மூலம் இதுவரையில் சுமார் 3,440 கோடி ரூபாய் அளவுக்கு தமிழ்நாட்டில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது எனக் குறிப்பிட்டார்.
மேலும் , தமிழ்நாட்டிற்கு பல்வேறு முதலீடுகளை ஈர்த்து விட்டு தற்போது தாயகம் திரும்பி உள்ளேன். மிகப்பெரிய சாதனை பயணமாக இந்த ஸ்பெயின் நாட்டுப் பயணம் அமைந்துள்ளது. பல்வேறு நிறுவன முதலீட்டாளர்களை சந்தித்தேன். தமிழ்நாட்டில் தொழில் தொடங்க இருக்கும் சூழல் குறிதது எடுத்துரைத்தேன். பல முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க தற்போது முன்வந்துள்ளன.
ஹபக் லாய்டு நிறுவனம் ரூ.2,500 கோடி முதலீடு செய்ய உள்ளது மொத்தமாக ரூ.3,440 கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளன. என குறிப்பிட்ட முதல்வர், அடுத்த வெளிநாட்டு பயணம் எப்போது என்ற கேள்விக்கு, தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த பயணம் நாடாளுமன்றம் தேர்தல் முடிந்த பிறகு தான் என குறிப்பிட்ட முதல்வர் , தமிழ்நாடு தனி பாதையில் செல்வதாக நியூயார்க் டைம் இதழ் பாராட்டியுள்ளது. தமிழ்நாட்டை தொழில்துறையில் சிறந்த மாநிலமாக மாற்றுவதே எனது இலக்கு எனவும் கூறினார்.
அடுத்ததாக, நேற்று முன்தினம் பிரதமர் நாடாளுமன்றத்தில் உரையாற்றியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி பேசியதை நானும் பார்த்தேன். படித்தேன். ரசித்தேன். சிரித்தேன் என கூறினார். பாஜக தான் எதிர்க்கட்சி போலவும், காங்கிரஸ் தற்போது ஆளுங்கட்சி போலவும் பிரதமர் மோடி தொடர்ந்து உரையாற்றி வருகிறார். 400 தொகுதிகளை வெல்வதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். அவர் மொத்தமுள்ள 543 இடத்தையும் வெல்வதாக கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என பிரதமரின் நாடாளுமன்ற உரை பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ கட்சி ஆரம்பித்தது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், மக்கள் பணியாற்ற யார் வந்தாலும் எனக்கு மகிழ்ச்சி தான் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.